அ.தி.மு.க. உட்கட்சி விவகார மனுக்கள் மீது விரைவான விசாரணை - ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி
பீகார் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு வேலை பளு அதிகமாக உள்ளது என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் தொடர்பாக திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், பெங்களூர் புகழேந்தி உள்ளிட்டோர் அளித்த புகார்கள் மீதான ஆரம்பகட்ட விசாரணையை நடத்தி முடிக்க, தேர்தல் ஆணையத்துக்கு காலவரம்பு நிர்ணயிக்கக் கோரி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டியுள்ள சூழலில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த வாய்ப்புள்ளதால், ஆரம்ப கட்ட விசாரணையை தேர்தல் ஆணையம் தாமதப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ஆர்.சுப்ரமணியன், நீதிபதி கே.சுரேந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் தொடர்பான புகார்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும் என காலவரம்பை குறிப்பிட்டு எழுத்துப்பூர்வமான விளக்கத்தை தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி தேர்தல் ஆணையம் இன்று கோர்ட்டில் பதில் மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஏற்கனவே 10 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, எழுத்துப்பூர்வமான மனுக்கள் பெறப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இயற்கை நீதியின் அடிப்படையில் மனுதாரர்களுக்கு போதுமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்த தேர்தல் ஆணையம், ஆரம்பகட்ட விசாரணை முடிக்கப்பட்ட பின்பு, இந்த பிரச்சனை குறித்து உரிய முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் பீகார் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு வேலை பளு அதிகமாக உள்ளது என்றும், அரசியல் சாசன அமைப்பான தேர்தல் ஆணையத்துக்கு, விசாரணை தொடர்பாக கால வரம்பு நிர்ணயிக்க தேவையில்லை என்றும், ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுப்படி, விரைவாக விசாரித்து முடிக்கப்படும் என்றும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை நாளைய தினத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.