ரிதன்யா உடல் ரீதியாக வரதட்சணை கொடுமை செய்யப்படவில்லை - ஐகோர்ட்டில் போலீஸ் அறிக்கை தாக்கல்

போலீசார் தாக்கல் செய்த பிரேத பரிசோதனை அறிக்கை, திருப்தி அளிக்கவில்லை என்று கோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது.;

Update:2025-08-01 03:48 IST


திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் திருமணமான 3½ மாதங்களில் புதுமணப்பெண் ரிதன்யா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தன்னுடைய கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் வரதட்சணை கேட்டு, உடல் மற்றும் மனரீதியாக கொடுமைப்படுத்தியதாக தற்கொலை செய்வதற்கு முன்பு தனது தந்தைக்கு ரிதன்யா 'வாட்ஸ் அப்'பில் ஆடியோ அனுப்பியிருந்தார்.

இதுதொடர்பாக பதிவான வழக்கில், ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு ஜாமீன் வழங்க திருப்பூர் மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு மறுத்து விட்டது.

இதையடுத்து, 3 பேரும் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் ஜான் சத்தியன் ஆஜராகி, ''ரிதன்யாவுக்கும், கவின்குமாருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன்பும் பின்பும் வரதட்சணை கேட்கவே இல்லை. மருத்துவ அறிக்கையில் மட்டுமல்ல, போலீஸ் விசாரணையிலும் மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரம் இல்லை என்று தெரியவந்துள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன்பே ரிதன்யா தற்கொலைக்கு முயன்றுள்ளார். எனவே ஜாமீன் வழங்க வேண்டும்'' என்று வாதிட்டார்.

ரிதன்யாவின் தந்தை தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபுடுகுமார் ராஜரத்தினம், ''கணவர், மாமியார், மாமனார் ஆகியோர் ரிதன்யாவுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமை செய்துள்ளனர். கொடுமை தொடர்ந்ததால், மனவேதனையில் தற்கொலை செய்துள்ளார். ரிதன்யாவின் சாவுக்கு அவரது கணவர் உள்ளிட்டோர்தான் காரணம். அவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது'' என்றார்.

போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் எஸ்.சந்தோஷ், "ரிதன்யா தற்கொலை வழக்கில் வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.,) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அவர் விசாரணை நடத்தி, வரதட்சணை கொடுமை நடக்கவில்லை என்று அறிக்கை அளித்துள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கையிலும் ரிதன்யா உடல் ரீதியாக துன்புறுத்தப்படவில்லை என்று முதல் கட்டமாக தெரியவந்துள்ளது. தடய அறிவியல் அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகள் 2 வாரத்துக்குள் வந்துவிடும்'' என்றார்.

முதல்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையை படித்து பார்த்த நீதிபதி, விவரம் எதுவும் இல்லாமல் அரைகுறையாக உள்ளது என்று கருத்து தெரிவித்தார். பின்னர், தடய அறிவியல் சோதனை முடிவுகளை போலீசார் தாக்கல் செய்ய வேண்டும்'' என்று உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்துக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்