திருமாவளவன் ஒருவித மனநல பாதிப்பால் பேசுகிறார்: எச்.ராஜா
தேசிய ஜனநாயக கூட்டணியில் விருப்பம் இருப்பவர்கள் இருக்கலாம் என்று எச்.ராஜா கூறினார்.;
சென்னை,
சென்னையில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் தமிழக சட்டம் - ஒழுங்கு இல்லை. ஏற்கெனவே, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டார். நியாயம், தர்மத்தை பற்றி கவலைப்படாமல் உண்மையை மறைப்பதற்கு அரசு முயற்சி செய்து வருகிறது. தற்போது நெல்லையில் கவின் என்ற இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சாதி ஒழிக்கப்பட்டுவிட்டது என்கிறார்கள். அப்படி என்றால் ஆணவக் கொலை ஏன் நடந்தது என திமுக பதிலளிக்க வேண்டும். சாதியை ஒழித்ததாக திமுகவும், திராவிட சித்தாந்தம் உடையவர்கள் பேசியது அனைத்தும் பொய். திராவிட சித்தாந்தம் கொண்டவர்களால் சாதி வன்மத்தை, சாதி உணர்வுகளை அழிக்கமுடியவில்லை.
திராவிட சித்தாந்தம் தமிழகத்துக்கு வந்த பிறகுதான் ஆணவக் கொலைகள் நடக்கின்றன. இது தமிழகத்துக்கு அவமானம். திராவிட இயக்கங்கள் தமிழகத்தின் அழிவு சக்தி என்பதற்கு ஆணவ கொலைகள் பெரிய எடுத்துக்காட்டு. ஆணவப் படுகொலை தொடர்பாக தேசிய அளவில் மத்திய அரசு சிறப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார். ஒருவித மனநல பாதிப்பால் அவர் இப்படி பேசுகிறார். திருமாவளவன் முதலில் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வர வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் விருப்பம் இருப்பவர்கள் இருக்கலாம். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தமிழகம் முழுக்க திமுக என்பது தீய சக்தி என வாக்காளர்களுக்கு சொல்லி கொடுத்து தான் அதிமுகவை நடத்தினார்கள். எனவே, அதிமுகவில் இருந்த யாராக இருந்தாலும், குச்சியால் திமுகவை தொட்டால் கூட அதை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.