தூய்மை பணியாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்: சீமான்
தமிழ்நாட்டில் தேவையில்லாத தண்டச் செலவுகள் எவ்வளவு என? சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.;
சென்னை,
சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது அவர் வெளியிட்ட அறிக்கையில் 10 முதல் 12 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்த 12 ஆயிரம் பேரை திடீரென பணி நீக்கும் செய்தது மிகவும் வேதனை அளிக்கிறது என தெரிவித்திருந்தார்.
நகரை தூய்மையாக்கும் பணியை தனியாருக்கு அளிப்பதன் அவசியம் என்ன இருக்கிறது?. பிறகு அரசுக்கு என்ன வேலை?. மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தி உறுப்பினர்களை தேர்வு செய்வது ஏன்?. எல்லாமே தனியார் மயம் என்றால் அரசு இங்கே என்ன செய்கிறது என்ற கேள்வி பொதுவாக எழுகிறது. போக்குவரத்து, கல்வி, மருத்துவம், சாலை போடுதல், பராமரித்தல், மின் உற்பத்தி விநியோகம் என அனைத்தும் தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
நாம் மூக்கை பிடித்துக் கொண்டு போடும் குப்பைகளை அவர்கள் மூழ்கி எடுத்து சுத்தம் செய்கிறார்கள். 12 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்துள்ள தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதில் என்ன இடையூறு உள்ளது. இதில், தமிழக அரசில் போதிய நிதி இல்லை என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் தேவையில்லாத தண்டச் செலவுகள் எவ்வளவு என சொல்லுங்கள். தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.