தூய்மைப் பணியாளர்கள் மீதான காவல்துறை அடக்குமுறை கண்டிக்கத்தக்கது - எஸ்டிபிஐ

எஸ்டிபிஐ கட்சி, எப்போதும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறது என அக்கட்சி பொதுச்செயலாளர் ஏ.கே.கரீம் தெரிவித்துள்ளார்.;

Update:2025-08-14 14:51 IST

சென்னை,

எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஏ.கே.கரீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தலைநகர் சென்னையில், பணி நிரந்தரம், தனியார்மய எதிர்ப்பு, சம்பள உயர்வு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை கோரி, கடந்த 13 நாட்களாக ரிப்பன் மாளிகை அருகில் ஜனநாயக வழியில் போராட்டம் நடத்தி வந்த தூய்மைப் பணியாளர்களை, நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி பலவந்தமாக கைது செய்து அப்புறப்படுத்தியது கண்டிக்கத்தக்கது. இது வெறும் போராட்டக்காரர்களை ஒடுக்கும் செயல் மட்டுமல்ல, மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் ஜனநாயக விரோத நடவடிக்கையாகும்.

இப்போராட்டத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சமூக ஆர்வலர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், மற்றும் வழக்கறிஞர்களையும் காவல்துறை கைது செய்துள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களின் நிலைமை குறித்து எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை என்பது கவலையளிக்கிறது. மேலும், அவர்கள் தாக்கப்பட்டதாகவும், அவர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகள் மனித உரிமைகளை மீறும் செயலாகும்.

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்க்க வாய்ப்பிருந்தும், அரசு அதை பயன்படுத்தாமல் காவல்துறை மூலம் பலவந்தமாக நடவடிக்கை எடுத்தது வருந்தத்தக்கது. இத்தகைய அடக்குமுறைகள் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதோடு, மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும்.

தூய்மைப் பணியாளர்கள் நமது சமூகத்தின் முதுகெலும்பாக செயல்படுகின்றனர். அவர்களின் உழைப்பு இல்லையெனில் நகரங்கள் தூய்மையாக இருக்காது. அவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு உணர்ந்து, பணி நிரந்தரம், உரிய சம்பளம், மருத்துவ வசதிகள், பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை உறுதி செய்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.

எஸ்டிபிஐ கட்சி, எப்போதும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில், அரசின் நடவடிக்கை ஏற்புடையதல்ல. முதல்-அமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டு தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி பிரச்சினைகளை தீர்க்க முன்வர வேண்டும் என வலியுறுத்துவதோடு, கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவரின் மீதான வழக்கையும் வாபஸ் பெற்று அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்திட வேண்டும் எனவும், கைது செய்யப்பட்டவர்களின் நிலை குறித்து வெளிப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்