சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி அனைத்து செவிலியர்களுக்கும் காலமுறை ஊதியம்: செவிலியர்கள் சங்கம் அறிக்கை

செவிலியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் என்ற சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பது சமுக நீதிக்கு எதிரானதாகும்.;

Update:2025-07-21 02:38 IST

தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் பொதுச் செயலாளர் சுபின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

செவிலியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் என்ற சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பது சமுக நீதிக்கு எதிரானதாகும்.

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் போட்டி தேர்வின் மூலம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கடந்த 2015-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளுக்கு செவிலியர்களை தேர்வு செய்தது. அரசு தேர்வு செய்த போது இரண்டு ஆண்டுகள் ரூ.7,700 மாத ஊதியத்தில் தொகுப்பூதிய முறையில் இரண்டு ஆண்டுகள் பணி செய்த பின் காலமுறை ஊதியத்திற்கு கொண்டு வரப்படுவார்கள் என்று பணி நியமன ஆணை வழங்கியது. ஆனால் தற்போது வரை குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே செவிலியர்கள் படிப்படியாக காலமுறை ஊதியத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

கடந்த 2018-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு நிரந்தர செவிலியர்களின் பணிக்கு இணையான பணியை செய்யும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் 6 மாதத்திற்குள் ஊதியம் வழங்க உத்தரவிட்டது. அதனை நிறைவேற்றாத அரசுக்கு எதிராக கடந்த 2019-ம் ஆண்டு சங்கம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் துறை செயலாளர் தலைமையில் குழு அமைத்து செவிலியர்களின் பணி குறித்து ஆராய்ந்து ஊதியம் வழங்குவதாக தெரிவித்தது. ஆனால் அரசு அமைத்த குழு நீதிமன்றத்தில் இரண்டு முறை உண்மைக்கு புறம்பான தகவல்களை சமர்ப்பித்தது.

குழுவின் அறிக்கையில் உண்மை தன்மை இல்லாததால் நீதிமன்றம் இரண்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைத்து செவிலியர்களின் பணியின் தன்மையை ஆராய உத்தரவிட்டது. அந்த நீதிபதிகளின் அறிக்கையின் அடிப்படையில் மூன்று மாதத்தில் எம்.ஆர்.பி. தொகுப்பூதிய செவிலியர்களுக்கு நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் அனைத்து பணி பலன்களையும் வழங்க உத்தரவிட்டது.

ஐகோர்ட்டின் உத்தரவை அமல்படுத்தாத அரசு தற்போது அந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளது. இது முழுக்க முழுக்க சமூக நீதிக்கு எதிரான செயலாகும்.

தேர்தல் வாக்குறுதியில் தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று கூறிவிட்டு அதற்கு நேர்மறையாக செயல்படுவது ஏமாற்றமளிக்கிறது. முறையாக தேர்வு பெற்றும் 8 ஆண்டுகள் பணி நிரந்தரம் செய்யப்படாமல், தங்கள் இளமை காலத்தை இழந்து மகப்பேறு விடுப்பு உரிமைகளை கூட இழந்து நிற்கும் செவிலியர்களுக்கு, 8 ஆண்டு போராட்டத்திற்கு பின் கிடைத்த வெற்றியைப் பறிக்க முயற்சிக்கும் இந்த நடவடிக்கை சமூக நீதி ஆட்சி நடத்தும் இந்த அரசின் கொள்கைகளுக்கு எதிரானதாகும்.

தமிழ்நாடு அரசு உடனடியாக சென்னை ஐகோர்ட்டு உத்தரவை நிறைவேற்றும் விதமாக அனைத்து செவிலியர்களுக்கும் காலமுறை ஊதியம் மற்றும் அனைத்து விதமான பலன்களையும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்