பணிமேம்பாடு ஊதியம் வழங்க வலியுறுத்தி 28ம்தேதி ஆர்ப்பாட்டம்: கல்லூரி ஆசிரியர் சங்கங்கள் அறிவிப்பு

சென்னை கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 7ம்தேதி பணிமேம்பாடு ஊதியம் வழங்க வலியுறுத்தி ஏயூடி-மூட்டா சார்பில் பெருந்திரள் முறையீடு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-07-21 04:11 IST

கல்லூரி ஆசிரியர்களுக்கான சங்கங்கள் சார்பில் மூட்டா பொதுச் செயலாளர் செந்தாமரைகண்ணன், ஏயூடி பொதுச் செயலாளர் சேவியர் செல்வகுமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் பணியிட நியமனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படாததால், தகுதி பெற்ற பலருக்கும் நிரந்தரப் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கப் பெறவில்லை. பின்னர் 2007-ம் ஆண்டு தான் உயர்கல்வியில் பணிநியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வருடமும் அதன் பின்னரும் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு தரநிலை ஊதியம் ஒவ்வொரு படிநிலைகளிலும் பணிமேம்பாடு உரிய காலத்தில் வழங்கப்படவில்லை. ரூ.6,000 முதல் 7,000 தர ஊதியம் போராடியே பெறப்பட்டது. ரூ.7,000 முதல் 8000 மற்றும் ரூ.8,000 முதல் 9,000 தர ஊதியம் வழங்கப்படவில்லை.

பல்கலைக்கழக மானியக்குழு (UGC) மற்றும் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் தமிழ்நட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணி மேம்மாட்டிற்கான (நிலை-10ல் இருந்து நிலை 11, நிலை 11ல் இருந்து நிலை 12 மற்றும் நிலை 12ல் இருந்து நிலை 13(A)) அரசாணையானது (G.O.Ms.No.5.Higher Education Department) தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறையால் 11.1.2021 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த அரசாணையைச் செயல்படுத்துவதற்கு உரிய செயல்முறைகளும் (4.5.2021) கல்லூரிக் கல்வி இயக்குநர் அவர்களால் வெளியிடப்பட்டது.

அதன்படி, அரசுக் கல்லூரிகளில் பணியாற்றிடும் ஆசிரியர்களுக்கு பணிமேம்பாடு தொடர்ந்து வழங்கப்படுவதுடன், அதற்குரிய ஊதியமும் நிலுவைத் தொகையோடு உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஊதியமோ நிலுவைத்தொகையோ வழங்கப்படுவதில்லை. அரசாணையின்படி பணிமேம்பாடு வழங்கிடக் கோரிய சங்கங்களின் தொடர் முறையீடுகளின் விளைவாக, தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கான எட்டு மண்டலங்களில் கோயம்புத்தூர் மற்றும் தஞ்சாவூர் மண்டலங்களில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு மட்டும் பணிமேம்பாட்டிற்கான ஊதியம் வழங்கப்பட்டது. பின்னர் அதுவும் நிறுத்தப்பட்டுவிட்டது.

சென்னை, திருச்சி, வேலூர், தர்மபுரி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய ஆறு மண்டலங்களில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களின் பணி மேம்பாட்டில் இணைப்பேராசிரியருக்கான (நிலை 12ல் இருந்து நிலை 13(A)) பணிமேம்பாட்டு ஆணை மட்டும் வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்று வரை அதற்குரிய நிலுவைத் தொகை மட்டுமல்ல, அடிப்படை ஊதியம் கூட வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இணைப்பேராசிரியருக்கான பணிமேம்பாடு மட்டுமின்றி, பணிமேம்பாட்டு நிலை-10ல் இருந்து நிலை 11, நிலை 11ல் இருந்து நிலை 12 மற்றும் நிலை 12ல் இருந்து நிலை 13(A) ஆகிய எவ்வித பணிமேம்பாட்டு நிலைகளுக்கும் ஊதியம் வழங்கப்படாத நிலையே நீடிக்கிறது. அவ்வாறே MPhil, PhD க்கான ஊக்க ஊதியமும் வழங்கப்படாமல் உள்ளது. எனவே தொடரும் இந்த பாதிப்புகளைச் சரி செய்திட வேண்டுகிறோம்.

தமிழ்நாடு முழுவதும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியம் தவிர எவ்வித பணிமேம்பாடும் வழங்கப்படாததால், ஆசிரியர்கள் பெரும் பாதிப்பிற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் உள்ளிட்ட அனைத்து பணப் பலன்களும் அரசுக்கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஒரே நேரத்தில் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் பணிமேம்பாட்டு அரசாணை அமல்படுத்துவதில் அரசுக்கல்லூரி ஆசிரியர்களுக்கும் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் இடையே வேறுபாடு பார்க்கப்படுவதாகவே தோன்றுகிறது.

அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களின் சங்கங்களான ஏ.யு.டி.-மூட்டா ஆகியவை இணைந்தும் தனித்தனியாகவும் தொடர் போராட்டங்களை நடத்தி வருவதன் விளைவாக, சங்கப் பொறுப்பாளர்களை கடந்த 23.6.2025 அன்று உயர்க்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தலைமைச் செயலகத்தில் நேரில் அழைத்துப் பேசினார். அந்தச் சந்திப்பின்போது அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களின் நான்கு வருடகால கோரிக்கையான பணிமேம்பாடு (CAS) ஊதியம் மற்றும் நிலுவைத்தொகை உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளும் பேசப்பட்டதன் தொடர்ச்சியாக, உயர்கல்வித்துறை அமைச்சர், வருகின்ற ஜீலை மாத சம்பளத்தில் CAS பணப்பலன் சேர்க்கப்படும் என்ற வாய்மொழி உத்தரவாதத்தை அளித்திருந்தார்கள். ஆனால் தற்போது, இந்த மாத ஊதியத்தில் பணிமேம்பாட்டு ஊதியத்தை சேர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

எனவே அரசுக்கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வருவது போலவே, அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் உரிமையான, நியாயமான, சட்டப்படியான, ஊதியம் மற்றும் அதற்கு உரிய நிலுவைத் தொகையை மேலும் கால தாமதமின்றி வழங்கிட தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, ஏயூடி-மூட்டா இணைந்து பின்வரும் போராட்டங்களை அறிவித்துள்ளோம்.

அதன்படி 28.7.2025, திங்கள்கிழமை அன்று தமிழகம் முழுவதும் உள்ள 8 கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகங்களில் முழுநேர ஆர்ப்பாட்டம் மற்றும் 7.8.2025, வியாழக்கிழமை அன்று சென்னை கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு நடைபெறும்.

தமிழ்நாடு முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டவைகள் அரசு ஆணைகளாக வேண்டும், ஆணைகள் எல்லாம் உடனே அமல்படுத்தப்பட வேண்டும் என்று உயர் அதிகாரிகளின் கூட்டத்தில் அறிவுறுத்தியதாக சமீபத்தில் ஊடகங்களின் வாயிலாக அறிகிறோம். ஆனால், அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகியும் அதன் பயன் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு மட்டும் இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. எனவே, அரசு ஆணையை அமல்படுத்தக் கோரித் தொடர்ந்து போராடி வரும் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் நிறைவேற்ற உடனே ஆவன செய்யுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்