பாஜகவின் கையில் அதிமுக சிக்கியுள்ளது; அது அழித்துவிடும் - அன்வர் ராஜா பேட்டி

திமுகவுடன் நேரடியாக மோத வேண்டும் என்பதுதான் பாஜகவின் அஜெண்டா என்று அன்வர் ராஜா கூறினார்.;

Update:2025-07-21 11:13 IST

சென்னை,

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அப்போது அவருக்கு முதல்-அமைச்சர் சால்வை அணிவித்து திமுகவில் இணைந்ததற்கான உறுப்பினர் அட்டையை வழங்கினார்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அன்வர் ராஜா கூறியதாவது:-

தளபதி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் என்னை இன்று திமுகவில் இணைத்துக்கொண்டேன். கருத்தியல் ரீதியாக நாங்கள் எல்லாம் வளர்ந்தவர்கள். ஆனால் அதற்கு புறம்பாக இப்போது அதிமுக இருக்கிறது.

அதிமுக தன்னுடைய கொள்கையில் இருந்து தடம்புரண்டு பாஜகவின் கையில் சிக்கியுள்ளது. தேசியவாத காங்கிரஸ், சிவசேனாபோல் அதிமுகவையும் உடைப்பதே பாஜகவின் எண்ணம். பாஜக எந்த கட்சியுடன் சேர்ந்தாலும் அதை அழிப்பது தான் நோக்கம்; அதிமுகவை அழித்துவிட்டு திமுகவுடன் நேரடியாக மோத வேண்டும் என்பதுதான் பாஜகவின் அஜெண்டா.

3 முறை பேட்டி அளித்த மத்திய மந்திரி அமித்ஷா ஒரு இடத்தில் கூட முதல்-அமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என கூறவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்; அக்கூட்டணியில் பாஜக இடம்பெறும் என்றுதான் சொல்கிறார். அதிமுக வென்றால் நான்தான் முதல்-அமைச்சர் வேட்பாளர் என்று எடப்பாடியாலும் இன்னும் உறுபதிட தெரிவிக்க முடியவில்லை.

நான்தான் போரை நிறுத்தினேன் என்று டிரம்ப் கூறுவதைப் போல நான்தான் முதல்-அமைச்சர் வேட்பாளர் என்று எடப்பாடி பழனிசாமி 10 நாட்களாக கூறி வருகிறார். அந்தளவிற்குத்தான் அவரின் நிலைமை இருக்கிறது. பாஜக ஒரு நெகடிவ் சக்தி; அதை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் பாஜகவை ஏற்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்