ஆட்டோ தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ. திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: நெல்லை மாநாட்டில் தீர்மானம்

நெல்லை மாவட்டம், பாபநாசத்தில் சிஐடியு நெல்லை மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் 10வது மாவட்ட மாநாடு நடைபெற்றது.;

Update:2025-07-21 05:45 IST

நெல்லை மாவட்டம், பாபநாசத்தில் சிஐடியு நெல்லை மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் 10வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. முன்னதாக கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. மூத்த தலைவர் முத்துகிருஷ்ணன் கொடியேற்றினார். மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். ஆட்டோ சங்கம் மாவட்டத் துணைச் செயலாளர் ஜெயராஜ் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வரவேற்பு குழு செயலாளர் இசக்கிராஜன் வரவேற்று பேசினார். சிஐடியு அகில இந்திய செயலாளர் கருமலையான் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் முருகன் வேலை அறிக்கைகளை சமர்ப்பித்து பேசினார். மாவட்ட பொருளாளர் வலதிபெருமாள் வரவு-செலவு அறிக்கைகளை சமர்ப்பித்து பேசினார்.

சிஐடியு மாநில குழு உறுப்பினர் மோகன், வரவேற்பு குழு தலைவர் ஆறுமுகம், சிஐடியு மாவட்டத் தலைவர் பீர்முகமதுஷா, வழக்கறிஞர் சட்ட ஆலோசகர் ராஜசேகரன், ரவீந்திரன் EPF, சிஐடியு மாவட்ட பொருளாளர் ராஜன், சி.பி.எம். பாப்பாகுடி ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம், நெல்லை மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் மரியஜான்ரோஸ் ஆகியோர் மாநாட்டில் வாழ்த்தி பேசினர். மாநாட்டில் ஆட்டோ சங்க புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி சங்கத்தின் நெல்லை மாவட்ட தலைவராக நடராஜன், மாவட்ட பொதுச் செயலாளராக முருகன், மாவட்ட பொருளாளராக வலதிபெருமாள், துணைப் பொதுச் செயலாளராக ஜெயராஜ் மற்றும் 11 துணைத் தலைவர்கள், 11 இணைச் செயலாளர்கள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மாநாட்டில் ஆட்டோ தொழிலை பாதுகாக்க அகஸ்தியர் கோவில் மற்றும் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சென்று வர ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் கேஸ் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு நல வாரியத்தின் மூலம் 4 லட்சத்திற்கான வீடு கட்டும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆட்டோக்களுக்கு விதிக்கப்படும் ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ. திட்டத்தை அமல்படுத்த வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிஐடியு தமிழ்நாடு ஆட்டோ சம்மேளன மாநில பொதுச் செயலாளர் சிவாஜி மாநாட்டை நிறைவு செய்து பேசினார். வரவேற்பு குழு பொருளாளர் பஷீர்பாபா நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்