100 சொகுசு கார்களை விற்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த திருடன் கைது

100 சொகுசு கார்களை விற்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த பிரபல கார் திருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.;

Update:2025-07-21 06:55 IST

சென்னை,

சென்னை அண்ணாநகர் கதிரவன் காலனியை சேர்ந்தவர் எத்திராஜ் ரத்தினம் (வயது 53). இவர் கடந்த மாதம் 10-ந் தேதி தனது விலை உயர்ந்த சொகுசு காரை தனது வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்தார். அப்போது அதிகாலையில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், நவீன கருவிகளை வைத்து சொகுசு காரை லாவகமாக திருடிச்சென்றுள்ளார்.

கார் திருடப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த எத்திராஜ், அங்கு வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படை ஆதாரமாக வைத்து சென்னை திருமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கார் திருடனை தேடி வந்தனர். இது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் திருமங்கலம் போலீசார் கார் திருடனை நோட்டமிட்டு வந்தனர்.

இந்த நிலையில் கார் கொள்ளையன் புதுச்சேரியில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து, போலீசார் அங்கு விரைந்தனர். இதையடுத்து அங்கு பதுங்கி இருந்த கார் திருடனை மடக்கிப்பிடித்த போலீசார் சென்னை அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த சட்டேந்திரசிங் ஷெகாவத் (43) என்பதும், எம்.பி.ஏ. பட்டதாரியான இவருடைய தந்தை ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர் ராஜஸ்தானில் இருந்து வந்து தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தங்கி இருந்து சொகுசு கார்களை நோட்டமிடுவதும், பின்னர் அதை நவீன கருவிகள் மூலம் லாவகமாக திருடி வந்ததும் தெரியவந்தது.

பின்னர் அதை சாலை மார்க்கமாகவே ஓட்டிச்சென்று ராஜஸ்தான், நேபாளம் பகுதிகளில் விற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது. இவர் இது போன்று 20 ஆண்டுகளாக 100-க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை திருடி பணம் சம்பாதித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். இதையடுத்து போலீசார் தொடர் கார்கள் திருட்டு வழக்கில் சட்டேந்திரசிங் ஷெகாவத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

முன்னதாக வடமாநில கார் திருடன் பிடிபட்ட தகவல் தெரிந்ததும் காரை பறிக்கொடுத்த 10-க்கும் மேற்பட்டவர்கள் சென்னை திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்