தொடர் மழை.. நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் 'கிடுகிடு' உயர்வு

மேற்குத்தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.;

Update:2025-07-21 04:15 IST

நெல்லை,

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பரவலாக சாரல் மழை பெய்தது.

நெல்லை மாநகர பகுதியில் மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. இதனால் வெளியே சென்ற பொதுமக்கள் குடை பிடித்தவாறு சென்றனர். மழையால் ஆங்காங்கே மழை நீர் தேங்கின.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் கனமழை பெய்ததால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 115.35 அடியாக இருந்தது.

நேற்று ஒரு நாளில் 1 அடி உயர்ந்து 116.15 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 76 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து கார் பருவ சாகுபடி மற்றும் குடிநீருக்காக 1750 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

சேர்வலாறு அணை நீர் மட்டம் நேற்று முன்தினம் 110.40 அடியாக இருந்த நிலையில் நேற்று ஒரேநாளில் 8 அடி உயர்ந்து 118.44 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 95 அடியாக உள்ளது. அணைக்கு 185 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 175 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

பாபநாசம் பகுதியில் 5 மில்லி மீட்டரும், சேர்வலாறு 4 மில்லி மீட்டரும் மணிமுத்தாறு 9 மில்லி மீட்டரும், கன்னடியன் 17 மில்லி மீட்டரும், அம்பையில் 13 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

அருவியில் குளிக்க தடை

இதே போல் மாஞ்சோலையில் 16 மில்லி மீட்டரும், காக்காச்சியில் 24 மில்லி மீட்டரும், நாலுமுக்கு பகுதியில் 33 மில்லி மீட்டரும், ஊத்து பகுதியில் 29 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் அகஸ்தியர் அருவியில் 10 நாட்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாசனத்திற்காக பாபநாசம், மணிமுத்தாறு, ராமநதி, கடனாநதி, அடவிநயினார், கருப்பாநதி உள்ளிட்ட அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கார் பருவத்திற்கான விவசாய பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது.

தென்காசியில் மழை

தென்காசி மாவட்டம் கடனாநதி பகுதியில் 17 மில்லி மீட்டர், ராமநதி பகுதியில் 12 மில்லி மீட்டர், குண்டாறு பகுதியில் 10 மில்லி மீட்டர், அடவிநயினர் பகுதியில் 16 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

கடனாநதி அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 63.10 அடியாக உள்ளது. ராமநதி அணையின் நீர்மட்டம் 3½ அடி உயர்ந்து 62½ அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 127 அடியாகவும் உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்