ஒருதலைக் காதலால் விபரீதம்: 9-ம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபர்
மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபர் தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.;
கோப்புப்படம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம் (25 வயது). இவர், சென்னையை அடுத்த பழைய பல்லாவரத்தில் தங்கி, பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவர், பல்லாவரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் 14 வயது மாணவியை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது,
இந்த நிலையில் நேற்று செல்வம், மாணவியின் வீட்டுக்கு சென்று அவரது தாயாரிடம், “உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து தாருங்கள்” என கேட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், “யார் நீங்கள், திடீரென வந்து ஏன் இப்படி கேட்கிறீர்கள்?” என்று கத்தி கூச்சலிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த செல்வம், தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் தாயாரின் கண் எதிரே மாணவியின் கழுத்தை அறுத்தார். பின்னர் வீட்டுக்கு வெளியே வந்து அதே கத்தியால் தன்னைத்தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். கழுத்தை அறுத்ததால் படுகாயம் அடைந்த அவர், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கழுத்தில் ஆழமான வெட்டு காயம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் காயம் அடைந்த மாணவிக்கு தாம்பரம் அரசு மருத்துவமனையில் ஒரு தையல் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பல்லாவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.