கோவை காவல் நிலையத்தில் ஒருவர் உயிரிழப்பு: நடந்தது என்ன? - காவல் ஆணையர் விளக்கம்
புகார் கொடுக்க வந்த நபர் காவல் நிலையத்தில் உயிரிழந்தது லாக்கப் டெத் கிடையாது என்று காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.;
கோவை,
கோவை பெரிய கடைவீதியில் பி1 காவல்நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல்நிலையத்தில் நேற்றிரவு 11 மணியளவில் ஒருவர் புகாரளிக்க வந்ததாகவும், இன்று காலையில் காவல் நிலையத்திலேயே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
எஸ்.ஐ. அறையில் அந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து கோவை காவல் ஆணையர் சரவணசுந்தர் விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:-
உதவி காவல் ஆய்வாளர் அறையில் தற்கொலை செய்த சம்பவம் யாருக்கும் தெரியவில்லை. காலையில் பணிக்கு வந்தவர்கள் அறையை திறந்து பார்த்த போது தான் தெரிய வந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில் பி1 காவல் நிலையத்தில் தற்கொலை செய்துக்கொண்ட நபர் பெயர் அறிவொளி ராஜன் (60) பேரூர் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என உறவினர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
தன்னை சிலர் துரத்துவதாக கூறி காவல் நிலையம் வந்த அறிவொளி ராஜன், காவல்நிலையத்தில் முதல் மாடியில் உள்ள எஸ். ஐ .அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் பணியின் போது கவன குறைவாக இருந்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். காவல் நிலையத்தில் நடந்த இந்த விவகாரம் தற்கொலை மட்டும் தான். லாக்கப் மரணம் கிடையாது.
தொடர்ந்து இந்த விவகாரத்தில் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட உள்ளது. உதவி ஆணையர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.