ஆன்லைன் டெலிவரி ஊழியர்கள் மின்சார ஸ்கூட்டர் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் - தமிழக அரசு உத்தரவு
மின்சார ஸ்கூட்டருக்கு மானியம் வழங்கும் திட்டத்திற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.;
சென்னை,
ஆன்லைன் பொருட்களை வினியோகிக்கும் தொழிலாளர்கள் மின்சார ஸ்கூட்டர் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் செயலாளர் வீரராகவ ராவ் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
“தமிழக சட்டசபையில் கடந்த 14.3.2025 அன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில், ‘‘வேகமாக வளர்ந்து வரும் இணையம் சார்ந்த பொருளாதார சூழலில், இணையம் சார்ந்த சேவைப்பணிகளில் (ஆன்லைன் பொருட்களை வீடுகளுக்கு வினியோகிப்பவர்கள்) ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது.
இந்த தொழிலாளர்களின் நலனுக்காக இணையம் சார்ந்த தற்சார்பு தொழிலாளர்கள் நல வாரியம் உருவாக்கப்பட்டது. இந்த நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 2 ஆயிரம் பேருக்கு புதிய மின்சார ஸ்கூட்டர் வாங்க தலா ரூ.20 ஆயிரம் மானியமாக வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டம் குறித்த முன்மொழிவை அரசுக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை இயக்குனர் அனுப்பியுள்ளார். அதில், இணையம் சார்ந்த சேவைப்பணிகளில் ஈடுபடும் 2 ஆயிரம் பேருக்கு ரூ.20 ஆயிரம் மானியமாக வழங்கும் திட்டத்திற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த முன்மொழிவை அரசு கவனமுடன் பரிசீலித்து அதை ஏற்க முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த திட்டத்திற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கி அரசு உத்தரவிடுகிறது.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.