சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் அடித்துக்கொலை: இறந்த நபர் யார்? - போலீஸ் விசாரணை
தலையில் காயங்களுடன் மயங்கி கிடந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;
சென்னை வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையம் அருகே உள்ள ஏ.ஏ. ரோடு நடைபாதையில் தலையில் ரத்த காயத்துடன் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கி கிடப்பதாக வந்த தகவலின்பேரில் வியாசர்பாடி போலீசார், அந்த நபரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அந்த நபர் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் வியாசர்பாடி ஏ.ஏ.ரோடு நடைபாதையில் வசித்து வரும் ஆசிப் என்ற கார்த்திக் (வயது 23) மற்றும் அவரது உறவினரான அலெக்ஸ் (27) ஆகியோர்தான் அந்த நபரை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கைதான ஆசிப், அலெக்ஸ் ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் அந்த பகுதியில் சாலையோரம் நடைபாதையில் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று இரவு அனைவரும் நடைபாதையில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக குடிபோதையில் சென்ற கொலையான 50 வயது நபர், நடைபாதையில் படுத்து இருந்து ஆசிப்பின் உறவுக்கார 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிட்டாள். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த ஆசிப், அலெக்ஸ் இருவரும் சேர்ந்து அந்த நபரை சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும் அங்கு கிடந்த உருட்டுக்கட்டையால் தலையில் பலமாக தாக்கி அங்கிருந்து விரட்டியடித்தனர். இதில் படுகாயம் அடைந்த நபர் அங்கேயே மயங்கி விழுந்தார்.
அதன்பிறகுதான் பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் போலீசார் அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தெரிந்தது. உயிரிழந்த நபர் மருத்துவமனையில் சுயநினைவு திரும்பாமலேயே இறந்துவிட்டதால் அவர் யார்? எந்த ஊர்? என்பது தெரியவில்லை.
கைதான 2 பேருக்கும் அவர் யார்? என தெரியாத நிலையில்தான் அடித்துக்கொன்று உள்ளனர். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார் கைதான 2 பேரிடமும் விசாரித்து வருகின்றனர். மேலும் கொலையானவர் யார்? என அடையாளம் காணும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.