திருப்பூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் என்கவுன்ட்டரில் பலி

தந்தை-மகன்கள் தகராறை விசாரிக்கச் சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.;

Update:2025-08-07 08:06 IST

குடிமங்கலம்,

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மகேந்திரன். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான இவருக்கு சொந்தமான தோட்டம், உடுமலை அருகே சிக்கனூத்து கிராமத்தில் உள்ளது. அந்த தோட்டத்தில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த தோட்டத்தை பராமரிக்க, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த மூர்த்தி (வயது 65), அவருடைய மகன் மணிகண்டன் (30) ஆகியோரை எம்.எல்.ஏ. நியமித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக இவர்கள் குடும்பத்துடன் அங்கு தங்கி இருந்து தோட்டத்தை பராமரித்து வருகின்றனர்.

மூர்த்தியின் மற்றொரு மகன் தங்கபாண்டி (25), நேற்று முன்தினம் இரவு அந்த தென்னந்தோப்புக்கு வந்தார். அங்கு அவர்கள் அனைவரும் பிரியாணியுடன், கறி விருந்து சமைத்து சாப்பிட்டனர். அப்போது தந்தை-மகன்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக திடீரென தகராறு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆத்திரம் அடைந்த மணிகண்டன், தந்தை மூர்த்தியை சரமாரியாக தாக்கினார்.

இதில் அவரது முகத்தில் ரத்தம் கொட்டியது. வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார். ஒரு கட்டத்தில் மூர்த்தி, திருப்பூர் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, தன்னை தனது மகன்கள் கொலை செய்ய முயற்சிப்பதாக கூறினார்.

கட்டுப்பாட்டு அறையில் இருந்த போலீசார், இரவு ரோந்து பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் (57) மற்றும் போலீஸ்காரர் அழகுராஜ் ஆகியோரை சம்பவ இடத்துக்கு செல்லுமாறு உத்தரவிட்டனர்.

அதன்பேரில் சண்முகவேல், அழகுராஜா ஆகியோர் ரோந்து வாகனத்தில் தென்னந்தோப்புக்கு சென்றனர். இதேபோல் தகராறு பற்றி தகவல் அறிந்த ஆமந்தகடவு பகுதியில் வசிக்கும் தோட்டத்து மேலாளர் ரங்கசாமி மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பிரபு, செல்வம் ஆகியோரும் அங்கு வந்தனர்.

தென்னந்தோப்புக்குள் ரத்தம் சொட்ட, சொட்ட நின்ற மூர்த்தியை ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். மேலும் மூர்த்தி மற்றும் அவரது மகன்களிடம் போலீசார் விசாரணை நடத்தி, சமரசம் செய்ய முயன்றனர்.

ஆனால் அவர்கள் போலீசாரின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில், தங்களுக்குள் நடந்த சண்டையை அவர்கள் மறந்து, எங்களது குடும்ப பிரச்சினையில் தலையிடுவதற்கு நீங்கள் யார்? என்று போலீசார் மற்றும் தோட்டத்து மேலாளரிடம் தகராறு செய்தனர்.

ஆத்திரம் அடைந்த மணிகண்டன், அங்கு கிடந்த அரிவாளை எடுத்து அங்கிருந்தவர்களை வெட்டுவதற்காக ஓடி வந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸ்காரர் அழகுராஜ், மேலாளர் ரங்கசாமி மற்றும் பிரபு, செல்வம் ஆகிய 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி இருட்டில் மறைந்து கொண்டனர்.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் அங்கிருந்து ஓட முயன்றபோது, அவரது கழுத்தில் மணிகண்டன் அரிவாளால் வெட்டினார். இதில் நிலைகுலைந்து அவர் கீழே விழுந்தார். அதன்பிறகும் ஆத்திரம் தீராத மணிகண்டன், சண்முகவேலின் தலையை துண்டித்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

தப்பி ஓடிய 4 பேரையும் வெட்டுவதற்காக அரிவாளுடன் மணிகண்டன் தேடினார். ஆனால் அவர்களை மணிகண்டனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவர்கள் 4 பேரும் உயிர் தப்பினர்.

இதன் பிறகு அங்கிருந்த போலீஸ் ரோந்து வாகன கண்ணாடியை மூர்த்தி, மணிகண்டன், தங்கபாண்டி ஆகியோர் அடித்து உடைத்தனர். வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த வாக்கி-டாக்கியை பிடுங்கி எறிந்து விட்டு அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர். உயிர் தப்பிய 4 பேரும், சம்பவம் குறித்து குடிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சீருடை அணிந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சிறிதுநேரத்தில் போலீசார் அங்கு சென்றனர்.

அங்கு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சண்முகவேல் உடல் கிடந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர். அவர் அணிந்திருந்த சீருடை கலைந்து இருந்தது. பெல்ட் கழற்றப்பட்டிருந்தது. தொப்பி மாயமாகி இருந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து தந்தை மற்றும் 2 மகன்கள் மீது கொலை, கொலை முயற்சி, பொதுச்சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பக்கத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு, கொலையாளிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டிருந்தது.

இதனிடையே மூர்த்தி, தங்கபாண்டி ஆகியோர் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று மாலை சரண் அடைந்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகி இருந்தது. தொடர்ந்து தலைமறைவாக இருந்த மணிகண்டனை வலைவீசி தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சிறப்பு எஸ்.ஐ.கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 3-வது நபரான மணிகண்டன் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். கைது செய்யச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் சரவணக்குமாரை வெட்டி விட்டு தப்ப முயன்ற போது, தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் மணிகண்டன் சம்பவ இடத்திலே உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக சப்-இன்ஸ்பெக்டர் கொலை சம்பவம் குறித்து, உயர் போலீஸ் அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். படுகொலை செய்யப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேலின் உடல் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதன் பின்னர் அவரது உடலுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து கலெக்டர் மனிஷ் நாரணவரே மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் சண்முகவேல் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அங்கிருந்து உடுமலையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு போலீஸ் டி.ஜி.பி.சங்கர் ஜிவால், ஏ.டி.ஜி.பி.டேவிட்சன் தேவாசீர்வாதம், கோவை சரக ஐ.ஜி.செந்தில்குமார், திருப்பூர் மாநகர கமிஷனர் ராஜேந்திரன், கோவை சரக டி.ஐ.ஜி. சசிமோகன், போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

 

இதைத்தொடர்ந்து சண்முகவேல் உடலை அடக்கம் செய்வதற்காக உடுமலை மின்மயானத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவரது உடலை போலீஸ் டி.ஜி.பி.சங்கர் ஜிவால், ஏ.டி.ஜி.பி.டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சுமந்து சென்றனர். அதன்பிறகு 30 குண்டுகள் முழங்க, இறுதி மரியாதை செலுத்தப்பட்டு மின்மயானத்தில் எரியூட்டப்பட்டது.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ சண்முகவேலை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்திருந்தார்.

பழைய குற்றவாளிகள்

கொலை சம்பவத்தில் தொடர்புடைய தந்தை, மகன்கள் 3 பேரும் பழைய குற்றவாளிகள் என்ற அதிர்ச்சி தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் 3 பேர் மீதும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதாவது மூர்த்தி மீது 2 வழக்குகளும், மணிகண்டன், தங்கபாண்டி ஆகியோர் மீது தலா 4 வழக்குகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் 3 பேரும் தலைமறைவாக வாழ்வதற்கு தோட்டத்து வேலையை தேர்வு செய்து இங்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்