திருச்சியில் சிற்றுந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
லால்குடியிலிருந்து திருச்சி சென்ற சிற்றுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.;
கோப்புப்படம்
லால்குடியிலிருந்து திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த சிற்றுந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடியிலிருந்து திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த TN48 AB8168 என்ற பதிவெண் கொண்ட சிற்றுந்து இன்று (09.08.2025) காலை 9.30 மணி அளவில் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி தடம்புரண்ட விபத்தில், லால்குடி, நன்னிமங்கலத்தைச் சேர்ந்த அரவிந்த் (வயது 20), லால்குடி முஸ்லிம் தெருவைச் சேர்ந்த சாதிக்பாட்சா (வயது 19), லால்குடியைச் சேர்ந்த விஸ்வநாதன் (வயது 56) ஆகிய மூன்று நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியறிந்து மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும் இவ்விபத்தில் பலத்த காயமடைந்த லால்குடியைச் சேர்ந்த நபில் (வயது 20), அப்துல் ரகுமான் (வயது 21), ஏகலைவன் (வயது 21), முஸ்தபா (வயது 20), மேலவாளாடியைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 21), நன்னிமங்கலத்தைச் சேர்ந்த ஆனந்த் (வயது 20), புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, வடகரையைச் சேர்ந்த கணபதி (வயது 19) ஆகிய ஏழு நபர்கள் மற்றும் லேசான காயமடைந்த லால்குடியைச் சேர்ந்த குகன் (வயது 20), திலீப் (வயது 19), ஆஷிக் (வயது 18) ஆகிய மூவரும் திருச்சிராப்பள்ளி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு தனி மருத்துவக் குழுவினரால் சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.