நீலகிரி: சுற்றுலா பயணிகளின் வாகனங்களை விரட்டிய காட்டுயானை
சுற்றுலா பயணிகளின் வாகனங்களை தனது குட்டியுடன் சேர்ந்து காட்டுயானை விரட்டியது.;
நீலகிரி,
கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதையில் மாமரம், முள்ளூர், குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது சீசன் காரணமாக பலா மரங்களில் பலாப்பழம் காய்த்து குலுங்கி வருகின்றன. இந்த பழங்களை உண்பதற்காக சமவெளி பகுதிகளில் இருந்து காட்டுயானைகள் வந்து முகாமிட்டுள்ளன. இவ்வாறு முகாமிட்டுள்ள காட்டுயானைகள் அவ்வப்போது சாலைகளில் உலா வருவதுடன், அவ்வழியாக செல்லும் வாகனங்களை துரத்தி வருகின்றன. எனவே மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தநிலையில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதை மாமரம் கிராம பகுதி சாலையோரம் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் குட்டியுடன் காட்டுயானை ஒன்று நின்றுகொண்டிருந்தது. இதைக்கண்ட அந்த வழியாக வந்த சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை சாலையோரம் நிறுத்தி, சத்தம்போட்டு தங்களது செல்போனில் காட்டுயானைகளை புகைப்படம், வீடியோ எடுத்து தொந்தரவு செய்தனர்.
வாகனங்களை விரட்டியதால் பரபரப்பு
இதைக்கண்ட தாய் யானை குட்டியுடன் சேர்ந்து சாலைக்கு வந்து சுற்றுலா பயணிகளின் வாகனங்களை துரத்தியது. இதனால் அச்சமடைந்த சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை பின்னோக்கி சிறிதுதூரம் இயக்கி தப்பித்தனர். இதையடுத்து நின்ற காட்டுயானை தன் குட்டியுடன் சாலையிலேயே சுற்றி, பின்னர் அங்கிருந்து சென்றது. இதையடுத்து தங்களது தவறை உணர்ந்த சுற்றுலா பயணிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டு வாகனங்களில் புறப்பட்டு சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குட்டியுடன் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் தெரிவிக்கையில், 'மலைப்பாதையில் உள்ள பகுதிகளில் பலாப்பழ சீசன் காரணமாக காட்டுயானைகளின் நடமாட்டம் தொடர்ந்து இருக்கிறது. எனவே மலைப்பாதை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். காட்டுயானைகள் சாலையில் நிற்பதை கண்டால் ஒலிப்பானை ஒலிக்கக்கூடாது.
மேலும் அவற்றை புகைப்படம், வீடியோ எடுத்தும், சத்தம் எழுப்பியும் தொந்தரவு செய்யக்கூடாது. இதனை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தனர்.