தவெகவுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக செயல்படக்கூடாது: கட்சியினருக்கு, தலைமை அறிவுரை

பொதுமக்களின் உற்ற தோழனாக செயல்பட வேண்டும் என்று தவெக தலைமை அறிவுறுத்தி உள்ளது.;

Update:2025-07-27 07:25 IST

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்களுக்கு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் அனுப்பியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியிருப்பதாவது:-

தற்போது சட்டமன்ற தேர்தல் பரப்புரை காலம். கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டிய வேளை. கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் குறிக்கோள்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக கட்சித் தோழர்கள் ஒருபோதும் செயல்படக்கூடாது.

கட்சித் தலைமையால் முறைப்படி அறிவிக்கப்படாத, அனுமதிக்கப்படாத வேறு வாசகங்களையோ, புகைப்படத்தையோ, ஸ்டிக்கராகவோ, வேறு வடிவங்களாகவோ, கட்சி நிகழ்ச்சிகளுக்காக, பரப்புரைகளுக்காக அல்லது வேறு எந்த காரணத்துக்காகவும் பயன்படுத்தக் கூடாது.

கட்சியின் தலைமையால் பிரத்தியேகமாக தேர்தல் பரப்புரை சார்ந்து அங்கீகரிக்கப்படாத பேனர் டிசைன்கள், இலச்சினைகள், வாசகங்களை பயன்படுத்தக் கூடாது. அங்கீகரிக்கப்பட்ட இலச்சினைகள், வாசகங்களோடு மக்கள் விரும்பும் முதல்-அமைச்சர் வேட்பாளர், கட்சித் தலைவர் சார்ந்த வாசகங்கள் மற்றும் படங்களை தவிர்த்து வேறு வாசகங்களையோ, புகைப்படங்களையோ பயன்படுத்தக் கூடாது.

இதனை பின்பற்றாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். கட்சி சார்பில் நடத்தப்படும் உள்ளரங்கு, பொதுவெளி, பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளின் போது, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அதேபோல், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எவ்வித இடையூறும் இல்லாமல், பொதுமக்களின் உற்ற தோழனாக செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்