தமிழகத்துக்கு ஆபத்து வந்தால் சீறும் சிங்கமாக மாறுவோம்: அமைச்சர் துரைமுருகன்

ஆணவக் கொலை என்பது கண்டிக்கத்தக்கது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.;

Update:2025-08-03 06:24 IST

வேலூர்,

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த பிரம்மபுரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் போன்று மேற்கு வங்காளத்தில் மம்தாவும் இது போன்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளாரே?.

பதில்: ஒரு மாநிலத்தில் ஒரு திட்டம் சிறப்பாக செயல்படுமானால் அந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள மற்ற மாநிலங்கள் விரும்பும். அந்த வகையில்தான் மம்தாபானர்ஜி, 'உங்களுடன் ஸ்டாலின்' போன்ற ஒரு திட்டத்தை மேற்குவங்காளத்தில் கொண்டு வந்துள்ளதாக பார்க்கிறேன். திட்டங்கள் நன்றாக இருந்தால் மற்றவர்கள் அதைப்பின்பற்றுவார்கள்.

கேள்வி: 'உங்களுடன் ஸ்டாலின்' என முதல்-அமைச்சர் பெயர் வைத்தது தொடர்பாக அ.தி.மு.க. வழக்கு தொடுத்துள்ளதே?.

பதில்: கோர்ட்டு என்ன சொல்கிறதோ அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம்.

கேள்வி: தமிழகத்தில் ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை நிலவி வருவது குறித்து?.

பதில்: ஆணவக் கொலை என்பது கண்டிக்கத்தக்கது. ஒரு நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போவதற்கு இது ஒரு முதல் காரணம். ஒரு நாட்டில் எவ்வளவு ஆணவக் கொலை நடக்கிறது என்பதை கணக்கெடுத்து பார்த்தாகனும். ஆணவக் கொலையை தடுக்க வேண்டும். அதில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது.

தனி சட்டம் இயற்றப்படுமா என்பதை முதல்-அமைச்சர்தான் சொல்வார். மேலும் மத்திய அரசு செய்யுமா? செய்யாதா? என்பது அவர்கள் இஷ்டம். அவர்கள் சொன்னால் அதனையும் நாங்கள் பின்பற்றுவோம். ஆக யாராவது செய்தால்தான் தடுக்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.

கேள்வி: தமிழகத்தில் பா.ஜனதாவின் வாக்கு வங்கியை அதிகரிக்க வெளிமாநிலத்தவர்களை கொண்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?.

பதில்: எத்தனையோ தில்லுமுல்லுகளை பீகார் வாக்காளர் பட்டியலில் செய்ய தொடங்கி உள்ளது பா.ஜனதா. அவர்களுக்கு எல்லாம் அவர்கள் ஊரிலேயே வேலை ஏற்பாடு செய்திருந்தால் இங்கு வந்திருக்கமாட்டார்கள். இப்போது என்ன செய்வது. இது மிகப்பெரிய ஒரு பிரச்சினை. அது இன்னொரு மாநிலத்திற்கு வரும். ஜாக்கிரதையாக அதை எதிர்த்தாக வேண்டும். எங்களுக்கு அந்த ஆபத்து வருகிற போது நாங்கள் அதை எதிர்க்க சீறும் சிங்கமாக மாறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்