அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு விரைவில் சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை முடிவு
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.;
சென்னை,
தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கடந்த 2006-2011-ம் ஆண்டு அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்த வழக்கு கோர்ட்டு விசாரணையில் உள்ளது.
அதன் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டப்பிரிவின் கீழ் அமைச்சர் ஐ.பெரியசாமி மீது அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. இந்த நிலையில் சென்னை மற்றும் திண்டுக்கலில் அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகன் செந்தில்குமார் எம்.எல்.ஏ., மற்றொரு மகன் பிரபு, மகள் இந்திராணி ஆகியோர் வீடு உள்பட 6 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 16-ந்தேதி அதிரடி சோதனை வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை தரப்பில் நேற்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:- அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகன் ஐ.பி.செந்தில் குமார், மகள் இந்திராணி ஆகியோரின் வீடுகளில் இருந்தும், அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது இளைய மகன் பிரபு ஆகியோர் இயக்குனர்களாக உள்ள ‘இருளப்பா மில்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்' அலுவலக வளாகத்தில் இருந்தும் சொத்துகள், முதலீடுகள் தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிறுவன வளாகத்தில் சில காகித நிறுவனங்கள் இயக்கப்படுவதும் கண்டறியப்பட்டு உள்ளது. மேற்கூறிய நிறுவனங்களின் கணக்குகள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் சாதனங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ள டிஜிட்டல் ஆவணங்களின் அடிப்படையில் சட்டப்படி பண பரிமாற்றம் பற்றிய விசாரணையை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். ஐ.பெரியசாமி நடத்தி வரும் நிறுவனங்களுக்கு எந்தெந்த வழிகளில் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது பற்றி விசாரணை நடத்தும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆவணங்களை வைத்து அடுத்த கட்ட விசாரணையையும் தொடங்கியுள்ளனர்.
இது தொடர்பாக அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்பவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மீது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அதன் அடிப்படையில் கேள்விகளை தயார் செய்து அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரணை நடத்தவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஆவணங்கள் தொடர்பான ஆய்வு நடவடிக்கைகள் முடிந்த பிறகு சம்மன் அனுப்பப்பட வாய்ப்பு இருப்பதாக அமலாக்கத் துறை வட்டா ரங்கள் தெரிவித்து உள்ளன.