பேராசிரியர்கள் விவரங்களை மாதந்தோறும் சரிபார்க்க முடிவு - அண்ணா பல்கலைக்கழகம் தகவல்
என்ஜினீயரிங் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் விவரங்களை மாதந்தோறும் சரிபார்க்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.;
சென்னை,
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் என்ஜினீயரிங் கல்லூரிகள் இணைப்பு அங்கீகாரம் பெறுவதற்காக போலியாக பேராசிரியர்கள் எண்ணிக்கையை காட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது, ஒரே பேராசிரியர் பல கல்லூரிகளில் பணியாற்றுவது போல காட்டப்பட்டு இருந்தது.
இதனையடுத்து அண்ணா பல்கலைக்கழகம் இதுதொடர்பாக விசாரித்து சில நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இதன் தொடர்ச்சியாக அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய சமீபத்திய ஆய்வில் சில கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை இருந்ததும், பேராசிரியர்களின் விவரங்களை சரிபார்ப்பதில் சுணக்கம் இருப்பதும் கண்டறியப்பட்டது. பின்னர் அதற்கு அவகாசம் வழங்கப்பட்டது. அதனை மேற்கொள்ளாத கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் பேராசிரியர்களின் ஆதார் மற்றும் மற்ற விவரங்களை இணையதளம் வாயிலாக சரிபார்க்கும் பணி நடந்து முடிந்தது. இந்த பணி இனி ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.