சினிமா பாணியில் சம்பவம்: 17 ஆண்டுகள் காத்திருந்து தந்தையின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கிய கல்லூரி மாணவன்
தந்தையை கொலை செய்த ரவுடியை 17 ஆண்டுகள் காத்திருந்து, இளைஞர் ஒருவர் பழிக்குப்பழி வாங்கியுள்ளார்.;
சமீப காலமாக சினிமாவில் கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட வன்முறைக் காட்சிகள் மிகுந்த திரைப்படங்கள் அதிக அளவில் வெளியாகி வருகின்றன. ஒரு கும்பல் குறிப்பிட்ட காரணங்களுக்காக மற்றொரு கும்பலை கொலை செய்வதும், அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் சமயம் பார்த்திருந்து பழிவாங்குவதுமாக கதைகள் அமைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் சென்னையில், சினிமாவை மிஞ்சும் வகையில் ஒரு பழிக்குப்பழி கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. 2 வயது சிறுவனாக இருந்தபோது, தந்தையை கொலை செய்த ரவுடியை 17 ஆண்டுகள் காத்திருந்து, இளைஞனான பிறகு பழிக்குப்பழி வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை டி.பி. சத்திரம் ஜோதி அம்மாள் நகரைச் சேர்ந்தவர் புல்கான் ராஜ்குமார் (42 வயது). பி பிரிவு ரவுடியாக இருந்த இவர் திருந்தி வாழ்ந்து வந்தார். ரவுடி தொழிலை விட்டுவிட்டு அ.தி.மு.க.வில் இணைந்து பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை ராஜ்குமாரின் வீட்டுக்குள் புகுந்த 5 பேர் கொண்ட கும்பல் மனைவி மற்றும் குழந்தையின் கண்முன்னே ராஜ்குமாரை சரமாரியாக வெட்டிக் கொன்றது.
மனைவி மற்றும் குழந்தைக்காக என்னை விட்டு விடுங்கள் என்று ராஜ்குமார் கெஞ்சியும் அந்த கும்பல் ஈவு இரக்கமின்றி அவரை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக டி.பி. சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 2008-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி செந்திலின் மகன் தந்தையின் கொலைக்காக 17 ஆண்டுகள் காத்திருந்து பழிதீர்த்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரவுடி செந்திலின் கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் 3 பேர் ஏற்கனவே முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டு விட்டனர். ஒருவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இந்த நிலையில் செந்தில் கொலை வழக்கில் தொடர்புடைய ராஜ்குமார் மற்றும் இன்னும் ஒரு நபர் என இருவர் மட்டுமே உயிரோடு இருந்தனர். இந்த நிலையில்தான் ராஜ்குமார் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2008-ம் ஆண்டு செந்தில் கொலை செய்யப்பட்டபோது 2 வயதாக இருந்த அவரது மகன் யுவனேஷ்தான் தற்போது வளர்ந்து பெரியவனாகி 17 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தையை கொலை செய்த ராஜ்குமாரை வஞ்சம் தீர்த்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பிபிஏ முதலாமாண்டு படித்து வரும் யுவனேஷ் தனது கல்லூரி நண்பர்கள் சிலரை கூட்டாளிகளாக சேர்த்துக் கொண்டு திட்டம் போட்டு ராஜ்குமாரை கொலை செய்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட ராஜ்குமார், யுவனேஷை பார்க்கும் போதெல்லாம் 'உன் அப்பனை கொன்னவனே நான்தான்' என்று கூறி கெத்து காட்டியுள்ளார். இது யுவனேஷை மனதளவில் கடுமையாக பாதித்த நிலையில், ராஜ்குமார் மீது அதிக வெறுப்பை ஏற்படுத்தி, அவரை கொலை செய்வதற்கு தூண்டுகோலாக அமைந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக யுவனேஷ் மற்றும் அவரது கல்லூரி நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.