சென்னை மக்கள் ஆவலோடு எதிர்பார்த்த ரூட்டில் மெட்ரோ - இன்ப அதிர்ச்சி
நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.;
சென்னை,
சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ ரெயில் சேவை மிகவும் கை கொடுத்து வருகிறது.மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து புறநகர் ரெயில் நிலையம், பஸ் நிலையம் போன்றவற்றை இணைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.இதனால் தினமும் 3.25 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். 2 வழித்தடங்கள் மூலம் மெட்ரோ ரெயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரெயிலில் பயணிகள் எளிதாக செல்ல பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதனால் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை மெட்ரோ வழித்தடத்தை நீட்டிக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆலோசனை வழங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. வழித்தடம் 4-ன் நீட்டிப்பு கலங்கரை விளக்கம் முதல் உயர்நீதிமன்றம் மெட்ரோ வரை அமைக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தாம்பரம் முதல் வேளச்சேரி வரை சுமார் 21 கி.மீ நீளமுள்ள வழித்தடம் கிண்டி மெட்ரோ நிலையத்துடன் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது
இரண்டு பணிகளுக்கும் விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிப்பதற்கான ஆலோசனை வழங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த திட்ட அறிக்கைகள், வழித்தட பாதை அமையும் இடங்கள், பயணிகளின் எண்ணிக்கை, பல்வேறு போக்குவரத்து முறைகளுடன் ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் விரிவாக மதிப்பீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.