‘பைக் டாக்சி’யில் சென்ற இளைஞர்.. அதிவேகமாக வந்த கார்.. நடுரோட்டில் அரங்கேறிய கொடூரம்
தாம்பரம் சானடோரியத்தில் ‘பைக் டாக்சி’ மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் அந்த கொடூர சம்பவம் நிகழ்ந்தது.;
தாம்பரம்,
திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு, சீனிவாசா நகரைச் சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 48). இவர், ரேபிடோ நிறுவனத்தில் ‘பைக் டாக்சி’ ஓட்டி வருகிறார். நேற்று அதிகாலை 2.40 மணியளவில் பால்ராஜ் தனது மோட்டார்சைக்கிளில் சென்னை கிழக்கு தாம்பரத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம், தசாவர் நாயக்கர்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் (22) என்பவரை ஏற்றிக்கொண்டு ஜி.எஸ்.டி. சாலையில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
தாம்பரம் சானடோரியம் பகுதியில் உள்ள அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி அருகே சென்றபோது பின்னால் வந்த கார் ஒன்று ‘பைக் டாக்சி’ மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் ‘பைக் டாக்சி’யை ஓட்டிய பால்ராஜ், அவருக்கு பின்னால் அமர்ந்து பயணம் செய்த பாலமுருகன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் இருவருக்கும் தலை, கை, கால், உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த பாலமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பால்ராஜ், சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.