அதிமுக கூட்டத்திற்குள் சென்ற ஆம்புலன்ஸ்... டென்ஷன் ஆன எடப்பாடி பழனிசாமி - என்ன நடந்தது.?
நோயாளி இன்றி வேண்டும் என்றே ஆம்புலன்சை கூட்டத்திற்கு நடுவே இயக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.;
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் சட்டமன்றத் தொகுதி வாரியாக, சூறாவளி பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, 33வது நாளாக நேற்று (18-08-2025) வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு சென்றார்.
இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அணைக்கட்டு பேருந்து நிலையம் எம்ஜிஆர் சிலை அருகே பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவ்வழியாக ஆம்புலன்ஸ் வந்துவிட்டதால் பேச்சை நிறுத்திவிட்டு ஆம்புலன்சிற்கு வழி விட கூறினார். அப்போது ஆம்புலன்சிஸில் நோயாளிகள் யாரும் இல்லை என தெரிய வந்தது.
இதனால், கோபமடைந்த எடப்பாடி பழனிசாமி, "ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கூட்டத்திலும் ஆம்புலன்சை விட்டு பிரச்சனை செய்துகொண்டு இருக்கிறீர்கள். மக்களுக்கு ஏதாவது ஏற்பட்டால் யார் பொறுப்பு?. இதுதான் தி.மு.க.வின் கேவலமான செயலாகும். இந்த ஆம்புலன்சில் நோயாளி இல்லை. நேருக்கு நேர் மோத திராணி தெம்பு இல்லாத தி.மு.க. அரசு வேண்டுமென்றே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது. நான் பேசிய 30 கூட்டங்களிலும் ஆம்புலன்ஸ்களை இடையூறாக விட்டு உள்ளனர். இதன் மூலம் எச்சரிக்கை விடுக்கிறேன். அடுத்த கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால் அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் அதில் நோயாளியாக மருத்துவமனைக்கு செல்வார். இதுகுறித்து காவல் துறையில் நிர்வாகிகள் புகார் அளிக்க வேண்டும்” அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “18.08.2025 அன்று, TN20G2904 பள்ளிகொண்டா ஆம்புலன்ஸ் ஒன்று இரவு 9:46 மணிக்கு நோயாளி ஒருவருக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக அவசரமாக செல்ல வேண்டி இருந்தது. (ஐடி: 210293).
இதன்படி நோயாளியை அணைக்கட்டு மருத்துவமனையில் இருந்து வேலூர் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்வதற்காக. அவரை கூட்டி செல்ல ஆம்புலன்ஸ் சென்றது. செல்லும் வழியில், அணைக்கட்டு பகுதியில் ஒரு கட்சி கூட்டம் நடைபெற்றதால், ஆம்புலன்ஸ் சாலையில் ஒரு பெரிய கூட்டத்தில் சிக்கியது.
கூட்டப் பகுதியை அடைந்ததும், சில கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தின் வழியாக செல்வதற்காக நகர்ந்து கொண்டிருந்தனர். இருப்பினும், கூட்டப் பகுதியை அடைந்ததும், சில கட்சி உறுப்பினர்கள் ஆம்புலன்சுடன் வாக்குவாதம் செய்து, சைரன்கள் ஏன் பயன்படுத்தப்படுகின்றன என்று கேள்வி எழுப்பி, ஆம்புலன்சை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் திருப்பிவிட்டனர். மேலும் ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தினர்.
வாகனத்தின் டிரைவரையும், அதில் இருந்தவரையும் தகாத வார்த்தைகளால் திட்டினர். ஆனால் அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் காயம் ஏற்படவில்லை, மேலும் ஆம்புலன்ஸ் சேதமடையவில்லை. நோயாளியை ஏற்றுவதற்காகத் தான் அணைகட்டு பகுதிக்கு சென்றது. அதன் பிறகு நோயாளி அணைக்கட்டு மருத்துவமனையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டு இரவு 11.35 மணிக்கு அடுக்கும்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.