செயல் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படும் அன்புமணி? - பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு இன்று ஆலோசனை
ராமதாஸ் தலைமையில் தைலாபுரம் தோட்டத்தில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.;
புதுச்சேரியை அடுத்த விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் உள்ள சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் கடந்த ஆண்டு (2024) டிசம்பர் 28-ந்தேதி சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவராக முகுந்தன் (டாக்டர் ராமதாஸ் மகள் வழி பேரன்) முன்மொழிந்தார்.
இதற்கு பா.ம.க. தலைவரான அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஒரே மேடையில் வார்த்தையால் மோதிக்கொண்டனர். இதைத்தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனான டாக்டர் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. கட்சியில் முழு அதிகாரம் தனக்கே உள்ளது என்று இருவரும் மாறிமாறி கூறி வருகின்றனர். இதனால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே பா.ம.க. பொதுக்குழு கூட்டம் அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் திருமண அரங்கில் கடந்த 9-ந்தேதி நடைபெற்றது. இதில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த பரபரப்பான சூழலில் பா.ம.க. மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் புதுவையை அடுத்த தமிழகப் பகுதியான பட்டானூர் சங்கமித்ரா கன்வெஷன் சென்டரில் நேற்று முன் தினம் நடந்தது. கூட்டத்திற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கி பேசினார்.
கூட்டத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., டாக்டர் ராமதாசின் மூத்த மகள் காந்திமதி, வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் கூட்டத்தில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் அன்புமணிக்கு எதிராக நிறுவனரால் நியமிக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் 16 குற்றச்சாட்டுகள் அடங்கிய அறிக்கையை ஜி.கே.மணி வாசித்தார்.
அதன் விவரம் வருமாறு:-
* கடந்த ஆண்டு பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி மைக்கை தூக்கி வீசியது. பனையூரில் கட்சி அலுவலகம் தொடங்கி உள்ளேன். என்னை அங்கு வந்து சந்திக்கலாம் என்றும், மற்றும் தொலைபேசி எண் வழங்கியது என கட்சியில் குழப்பத்தையும், பிளவும் ஏற்படு்த்தியது.
* தைலாபுரம் இல்லத்தில் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் நிர்வாகிகளை தொடர்புகொண்டு தடுத்து நிறுத்தியது.
* பா.ம.க.வின் சமூக ஊடகத்தில் ராமதாஸ் மீது அவதூறு பரப்பியது.
* சமாதான பேச்சுவார்த்தைகளை உதாசீனப்படுத்தியது.
* ராமதாஸ் வீட்டில் ஒட்டு கேட்டுக்கும் கருவி வைத்தது.
* டாக்டர் ராமதாசால் நியமிக்கப்பட்ட அனைத்து நியமனங்களும் செல்லும். அன்புமணியால் நியமிக்கப்பட்ட நியமன நிர்வாகிகள் அறிவிப்பு செல்லாது என அடுக்கடுக்கான 16 குற்றச்சாட்டுகளை ஜி.கே.மணி எம்.எல்.ஏ. வாசித்து அறிக்கையை சமர்ப்பித்தார்.
இந்த சூழலில் பாமக நிறுவனர் ராமதாஸ் அமைத்த ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிக்கைக்கு, 24 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டும் அன்புமணி தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அன்புமணி பதிலளிக்காத நிலையில், செயல்தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்குவது தொடர்பான முக்கிய நடவடிக்கைகள் குறித்து தைலாபுரத்தில் இன்று பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.