டி.ஆர்.பாலு மனைவியின் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்
மறைந்த ரேணுகா தேவி மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகிறார்கள்.;
சென்னை,
முன்னாள் மத்திய மந்திரியும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலுவின் மனைவியும், தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகா தேவி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காகத் தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணியளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மறைந்த ரேணுகா தேவி மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகிறார்கள். அந்த வகையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ரேணுகா தேவி மறைவு குறித்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
”திமுகவின் பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான, நண்பர் டி.ஆர்.பாலு அவர்களின் மனைவி ரேணுகா தேவி இயற்கை எய்திய செய்தி துயரம் தருகிறது.
பாலு அவர்களுக்கும், அவர்தம் மைந்தர், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர், தம்பி டி.ஆர்.பி.ராஜா அவர்களுக்கும், குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.