ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு நற்செய்தி: ரூ.1,138 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு
போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வு கால பண பலன்களை வழங்கும் வகையில் முதற்கட்டமாக ரூ.1,137. 97 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் கடந்த ஜூன் 2023 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஓய்வுபெற்றவர்கள் மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்கள், பணியின் போது உயிரிழந்த போக்குவரத்து ஊழியர்கள் அனைவருக்கும் ஓய்வுதிய பண பலன்களை வழங்கும் வகையில் தமிழக அரசு ரூ.265.44 கோடி ஒதுக்கீடு செய்தது.
அதேபோல, தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் ஏப்ரல் 2024 முதல் ஜனவரி 2025 வரையிலான காலகட்டத்தில் பங்களிப்பு ஓய்வுதியத் திட்டத்தின் ( CPS ) கீழ் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்கள், பணியின்போது உயிரிழந்த போக்குவரத்து ஊழியர்களுக்கு CPS பங்களிப்பில் 50 சதவீதம் என்ற வகையில் ரூ.40.26 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக ஜூலை 2023 முதல் ஜனவரி 2025 வரையிலான காலக்கட்டத்தில் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்கள், பணியின் போது உயிரிழந்த ஊழியர்கள் என அவர்களுக்கான ஓய்வு கால பண பலன்களை வழங்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசிடம் போக்குவரத்துத்துறை ரூ.2,450 கோடி நிதி வழங்க வேண்டும் என கேட்டு இருந்தது.
"நீண்ட காலமாக போக்குவரத்து ஊழியர்களுக்கான பிரச்சினை உள்ளது. அதனை தீர்க்கும் பொருட்டு இந்த தொகையை தமிழக அரசு போக்குவரத்து கழகத்திற்கு வழங்க வேண்டும்" என கேட்டு கொண்டது. அதனை தமிழக அரசு கவனமாக ஆராய்ந்த பிறகு ஜூலை 2023 முதல் ஏப்ரல் 2024 வரை உள்ள காலகட்டத்தில் தமிழக அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்கள், பணியின்போது உயிரிழந்த போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வு கால பண பலன்களை வழங்கும் வகையில் முதற்கட்டமாக ரூ.1,137. 97 கோடியை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.