திருநம்பியை சுயமரியாதை திருமணம் செய்த இளம்பெண்
இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வந்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது.;
சேலம்,
சேலம் மாவட்டம் அரிசி பாளையத்தை சேர்ந்தவர் துரைராஜ் மகள் இலக்கியா ஸ்ரீ (வயது 21) பட்டதாரி பெண் ஆவார். சேலம் மாவட்டம் செல்லத்தாம்பட்டியை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் கார்த்திக் திருநம்பி (வயது 21) என்பவரும் பள்ளி காலத்தில் இருந்தே நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
இந்தநிலையில் இருவரும் ஒரே கல்லூரியில் இளங்கலை படித்து வந்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்ததும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதைதொடர்ந்து இருவரும் நேற்று வீட்டை விட்டு வெளியேறி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தில் உள்ள சுயமரியாதை திருமண நிலையத்தில் தி.க.வின் கோபி மாவட்ட தலைவரும் வழக்கறிஞருமான சென்னியப்பன் முன்னிலையில் சுயமரியாதை திருமண உறுதி மொழியை எடுத்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். திருநம்பியை திருமணம் செய்த பட்டதாரி பெண்ணுக்கு அங்கிருந்தவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.