செப்7-ம் தேதி முழு சந்திர கிரகணம்: சென்னையில் தெரியும்
அடுத்த முழு சந்திர கிரகணம் 2026-ம் ஆண்டு மார்ச் 3 அன்று நிகழ உள்ளது.;
சென்னை,
சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது ஏற்படுகிறது. பூமி, சூரிய ஒளியை சந்திரன் மேல் விழாமல் தடுப்பதால் சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதை ரத்த நிலவு என்றும் சொல்வார்கள். இந்தநிலையில், வருகிற செப்டம்பர் 7-ந்தேதி முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதை சென்னையில் உள்ளவர்கள் வெறும் கண்களால் பார்க்கலாம்.
செப்டம்பர் 7-ந்தேதி இரவு 8.58 மணிக்கு தொடங்கும் கிரகணம் 8-ந் தேதி அதிகாலை 2.25 மணி வரை தெரியும். இதை எந்த வித கருவிகளும் இன்றி வெறும் கண்களாலேயே பார்க்கலாம். குறிப்பாக சென்னையில் உள்ளவர்கள் கிழக்கு நோக்கி வானத்தை பார்த்தாலே போதும் முழு சந்திர கிரகணத்தை பார்த்து ரசிக்கலாம்.
பூமியின் லேசான நிழலுக்குள் சந்திரன் நுழையும் கட்டத்தை பெனும்பிரல் என்று அழைக்கிறார்கள். அதில் தொடங்கி கிரகணம் மேலும் வளர்கிறது. இதை காண்பதற்கு மட்டும் தொலைநோக்கி தேவைப்படலாம். பூமியின் மைய இருண்ட பகுதியான அம்ப்ரா சந்திரனை மறைக்கத் தொடங்கி முழுமை அடையும் போது சந்திரன் சிவப்பு நிறத்தில் ஒளிரத் தொடங்கும்.
இரவு 11.41 மணிக்கு முழுமையான சந்திர கிரகணம் நிகழும். இரவு 9.57 மணி முதல் நள்ளிரவு 12.22 மணி வரை, ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, அலாஸ்கா, தென் அமெரிக்காவின் கிழக்கு பகுதி மற்றும் உலகின் பெருங்கடல்கள் மற்றும் துருவப் பகுதிகள் முழுவதும் இந்த நிகழ்வு தெரியும்.
அடுத்த முழு சந்திர கிரகணம் 2026-ம் ஆண்டு மார்ச் 3 அன்று நிகழ உள்ளது. ஆனால் அதை சரியாக பார்க்க முடியாது. அதன் ஒரு பகுதி மட்டுமே இந்தியாவில் தெரியும். ஏனென்றால் சந்திர கிரகணம் நிகழ்ந்து முடியும் நேரத்தில்தான் இங்கு நமக்கு சந்திரன் உதிக்கும். இவ்வாறு தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சவுந்தரராஜ பெருமாள் கூறியுள்ளார்.