திருநெல்வேலி: தங்க செயின் வழிப்பறி செய்த வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டம், கே.டி.சி.நகர் அருகே ஒரு பெண்ணிடம் வாலிபர் ஒருவர் தங்கச் செயினை வழிப்பறி செய்தார்.;
திருநெல்வேலி மாவட்டம், கே.டி.சி.நகர் அருகே கடந்த 2020-ம் ஆண்டு ஒரு பெண்ணிடம் தங்கச் செயினை வழிப்பறி செய்த வழக்கில், நேற்று திருநெல்வேலி மூன்றாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், குற்றவியல் நடுவர் ஜெயசங்கரகுமாரி தீர்ப்பு வழங்கினார்.
நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று வழக்கில் சம்பந்தப்பட்ட, பாளையங்கோட்டை, மனக்காவலம்பிள்ளைநகரை சேர்ந்த அஸ்வின் ஹரிஹரசுதன் (வயது 23) மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, வழிப்பறி செய்த குற்றத்திற்காக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் திறம்பட சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த திருநெல்வேலி ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. ரகுபதிராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் தாலுகா காவல் நிலைய காவல் அதிகாரிகள், காவலர்கள், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் ஏஞ்சல் செல்வராணி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
மேலும் நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சியங்களை ஆஜர்ப்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் முனைப்பில் தொடர்ந்து உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்று திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.