சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு காசோலை - உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
6 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் 13.40 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.;
சென்னை,
தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியியின் கீழ் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தேசிய, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்கான செலவுகளுக்காகவும், உயர் பயிற்சி உபகரணங்கள் வாங்குவதற்காகவும், 23 வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப்-2025 போட்டியை நடத்துவதற்காகவும் மொத்தம் 23.40 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் தமிழ்நாட்டினை விளையாட்டில் முன்னோடி மாநிலமாக உருவாக்கிட தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை ஏற்படுத்தி, விளையாட்டு வீரர், வீராங்கனைகள் வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ள செல்வதற்கான தங்குமிட கட்டணம், விமான கட்டணம், உணவு, அனுமதிக்கட்டணம் உள்ளிட்ட செலவுகளை மேற்கொள்ள நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். மேலும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பயன்படுத்த விளையாட்டு உபகரணங்களும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் நிதியுதவி மூலம் வழங்கப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில், தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (12.8.2025) தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வரும் கேலோ இந்தியா இளையோர் மும்முறை தாண்டுதல் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற எஸ். ரவிபிரகாஷ்க்கு தடகள விளையாட்டு உபகரணம் வாங்குவதற்காக 1,00,000 ரூபாய்க்கான காசோலையையும், 39வது தேசிய ஜூனியர் தடகளப்போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற ஜே. கோகுல் பாண்டியனுக்கு தடகள விளையாட்டு உபகரணம் வாங்குவதற்காக 70,000 ரூபாய்க்கான காசோலையையும், சர்வதேச பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக 2025 தேசிய பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஆர். தீபிகா ராணி ராமநாதன், கேலோ இந்தியா பாரா விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஜி. அவிநாஷ், 2025 தேசிய பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற டி. சரவண குமார் ஆகியோருக்கு தலா 1,50,000 ரூபாய்க்கான காசோலைகளையும், மாநில, தேசிய அளவிலான பாரா தடகளப்போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற லோகேஷுக்கு உயர்ரக பாரா தடகள உபகரணம் (கார்பன் பிளேடு ரன்னர்) வாங்குவதற்காக 7,20,000 ரூபாய்க்கான காசோலையையும் என 6 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் 13.40 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.
23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025 போட்டியை நடத்துவதற்காக மாஸ்டர்ஸ் அத்லெடிக்ஸ் அமைப்பிற்கு 10,00,000 ரூபாய்க்கான காசோலையையும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தேசிய அளவிலான போட்டியில் பதக்கம் வென்ற பேட்மிண்டன் விளையாட்டு வீரர் கவின் தங்கம், தற்காப்புக் கலையில் (Martial Arts) பதக்கம் வென்ற வீராங்கனை பாத்திமா ஆப்ஷான் ஆகியோர் தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
2023 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியின் கீழ் இதுவரை 3,525 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தேசிய, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்கான செலவுகளுக்காகவும், உயர் பயிற்சி உபகரணங்கள் வாங்குவதற்காகவும், விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்காகவும் 23.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.