போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை - பொய் புகார் அளிப்பவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
போக்சோ சட்டத்தை பயன்படுத்தி பொய் புகார் அளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.;
கோப்புப்படம்
சென்னை ராயப்பேட்டையில் குடும்பப் பிரச்சினையில் மாமனார் மீது போக்சோவில் மருமகள் பொய் புகார் கொடுத்தது தெரிய வந்துள்ளது. முன்னதாக 8 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 60 வயது தாத்தா மீது புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக தாத்தா மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் விசாரணையில், கணவரின் சொல் கேட்டு மாமனார் மீது மனைவி பொய் புகார் கொடுத்தது தெரிய வந்துள்ளது. தனது தாத்தா மீது எந்தத் தவறும் இல்லை என்றும், தாத்தா தன்னை 'பேட் டச்' செய்ததாக தந்தைதான் புகார் அளிக்கச் சொன்னார் என்றும் அந்த பெண் குழந்தை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உண்மைக்குப் புறம்பாக போக்சோ சட்டத்தை பயன்படுத்தி பொய் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டப்பிரிவு 22(1)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.