கள்ளக்காதலை கண்டித்ததால் மனைவி இறந்ததாக உறவினர்களை வரவழைத்த முன்னாள் ராணுவ வீரர்
முன்னாள் ராணுவ வீரர் தனது மனைவியை கொடுமைப்படுத்தி வந்தார்.;
குமரி,
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள புத்தளம் பகுதியை சேர்ந்தவர் 43 வயதுடைய முன்னாள் ராணுவ வீரர். இவர் பணி ஓய்வு பெற்ற பின்பு நாகர்கோவிலில் ஓட்டல் நடத்தி வந்தார். இந்த ஓட்டலில் பூதப்பாண்டி அருகே உள்ள நாவல்காடு பகுதியை சேர்ந்த ஒரு பெண் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகியதாக கூறப்படுகிறது. அத்துடன் முன்னாள் ராணுவ வீரர் தனது மனைவியை கொடுமைப்படுத்தி வந்தார்.
இதனிடையே தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ஓட்டலை மூடினர். பின்னர் மனைவிக்கு சொந்தமான நிலத்தை ஈடு வைத்து பணம் பெற்றுள்ளார். ஆனால் எந்த தொழிலிலும் முறையாக ஈடுபடவில்லை. இதனால் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதற்கிடையே மனைவியின் செல்போன் பழுதானதால் அவர் தனது சிம்கார்டை கணவரின் செல்போனில் பொருத்தி பயன்படுத்தியுள்ளார்.
அந்த செல்போனில் முன்னாள் ராணுவ வீரர், ஓட்டலில் வேலை பார்த்த பெண்ணுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் இருந்தன. அவற்றை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி கணவரை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த கணவர், மனைவி இறந்து விட்டதாக உறவினர்களுக்கு செல்போன் மூலம் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பதறியடித்து கொண்டு விரைந்து வந்தனர். அப்போது தவறான தகவல் என்பதை அறிந்து கணவரை கண்டித்தனர்.
இதுகுறித்து மனைவி சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் கணவர் மீது புகார் அளித்தார். அத்துடன் கணவரை பிரிந்து தாயார் வீட்டிற்கு சென்றார். அதன்பின்பு மனைவியின் கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை முன்னாள் ராணுவ வீரர் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மனைவி கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சத்தியபாமா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கள்ளக்காதலை கண்டித்ததால் மனைவி இறந்ததாக உறவினர்களை முன்னாள் ராணுவ வீரர் வரவழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.