போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
தூய்மை பணியாளர்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் போராட்டம் நடத்திக் கொள்ளலாம் என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.;
சென்னை,
சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 ஆகியவற்றில் தூய்மைப் பணி தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கடந்த 1-ந்தேதி முதல் ரிப்பன் கட்டிடம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு, பகல் பாராமல் அவர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அவர்களின் போராட்டத்திற்கு, அ.தி.மு.க., த.வெ.க., பா.ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதேபோல, திரைப்பட நடிகர் நடிகைகளும் நேரில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 13-வது நாளாக இன்றும் தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அனுமதிக்கப்பட்ட இடத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்திக் கொள்ளலாம் என்றும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. மேலும் போராட்டம் நடத்தும் இடத்தில் இருந்து தூய்மை பணியாளர்களை விரைவில் அப்புறப்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தூய்மை பணியாளர்களின் போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி தேன்மொழி என்பவர் வழக்கு தொடர்ந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.