முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் - ஆன்லைன் முன்பதிவுக்கான கால அவகாசம் நீட்டிப்பு

மாணவர்கள் தாங்களாகவோ, தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-08-13 20:02 IST

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைப் போட்டிகள் 2025 மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இணையதள முன்பதிவு (online registration) செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பை 2025 விளையாட்டுப் போட்டிகளுக்கான இணையதள முன்பதிவு (Online Registration) 14.07.2025 முதல் https://cmtrophy.sdat.in/https://sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 10 லட்சம் போட்டியாளர்கள் முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவிற்கான கடைசி நாள் 16.08.2025 என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுவரை முன்பதிவில் கிடைக்கப்பெற்ற அமோக வரவேற்பினை தொடர்ந்து பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைத்து பிரிவினரின் வேண்டுகோளுக்கு இணங்க மற்றும் அனைத்து தரப்பு மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்கும் வகையில் இணையதள முன்பதிவு செய்திட கால அவகாசம் 20.08.2025 தேதி இரவு 8 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் தாங்களாகவோ, தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தங்கள் மாவட்ட விளையாட்டு அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். “ஆடுகளம்” தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்