அதிமுகவில் இருந்து மைத்ரேயன் நீக்கம்.. திமுகவில் இணைந்ததால் நடவடிக்கை
அதிமுகவில் இருந்து மைத்ரேயன் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.;
சென்னை,
சென்னையை சேர்ந்த பிரபல புற்றுநோய் சிகிச்சை நிபுணரான டாக்டர் வி.மைத்ரேயன் கடந்த 1991-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து 1999-ம் ஆண்டு வரை அக்கட்சியில் பயணித்தார். இதையடுத்து, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று மைத்ரேயன் அதிமுகவில் இணைந்தார்.
2002-ம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ச்சியாக 3 முறை எம்.பி.யாக இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் உட்கட்சி மோதல் ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்ததற்காக மைத்ரேயன் கட்சியில் இருந்து நீக்கிவைக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்து வந்தார்.
இதையடுத்து கடந்த 2023 ஆண்டு ஜூன் மாதம் 9-ம் தேதி டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங், தேசிய செயலாளர் சி.டி.ரவி, செய்தித்தொடர்பாளர் ஜாபர் இஸ்லாம் ஆகியோர் முன்னிலையில் மைத்ரேயன் பாஜகவில் இணைந்தார். அவருக்கு பா.ஜ.க. உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த 2024 ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மைத்ரேயன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மைத்ரேயன் அதிமுகவில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டார்.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். பின்னர் மைத்ரேயனுக்கு திமுக உறுப்பினர் அட்டையை முதல்-அமைச்சர் வழங்கினார். அதனை தொடர்ந்து மைத்ரேயனுக்கு மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததால் மைத்ரேயன் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிமுகவில் இருந்து மைத்ரேயன் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடிபழனிசாமி அவர்களின் முக்கிய அறிவிப்பு:
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்,
மைத்ரேயன், Ex. M.P., கழக அமைப்புச் செயலாளர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.