திருச்செந்தூர் கோவிலில் கொடிப்பட்டம் வீதி உலாவின்போது இருதரப்பினர் இடையே திடீர் மோதல்
மோதல் தொடர்பாக கோவில் நிர்வாகத்தினர் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.;
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று முதல் 25-ந் தேதி வரை 12 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. திருவிழா நாட்களில் காலை மற்றும் மாலையில் சுவாமி, அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் வருகிற 23-ந் தேதி காலை 7 முதல் 7.30 மணிக்குள் நடைபெற உள்ளது.
இதையொட்டி நேற்று திருச்செந்தூர் வடக்கு ரதவீதியில் உள்ள 12-ம் திருவிழா மண்டபத்தில் வைத்து 14 ஊர் செங்குந்தர் சார்பில் சிதம்பர தாண்டவ விநாயகருக்கு சிறப்பு பூஜையும், கொடிப்பட்டத்துக்கு தீபாராதனையும் நடந்தது. மண்டபத்தில் இருந்து கொடிப்பட்டத்தை வாங்குவதற்காக 3-ம் படி செப்பு ஸ்தலத்தார் ஐயப்பன் அய்யர் மற்றும் திரிசுதந்திர ஸ்தலத்தார் சபா, கைங்கர்யா சபா நிர்வாகிகள் காத்திருந்தனர்.
ஆனால் மண்டபத்தின் வெளியே வைத்துதான் கொடிப்பட்டத்தை தருவோம் என கூறிவிட்டு 14 ஊர் செங்குந்தர் உறவின்முறை அபிவிருத்தி சங்க நிர்வாகிகள் புறப்பட்டனர். இதனால் இரு தரப்புக்குமிடையே திடீர் மோதல் உருவானது. கடும் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எங்களை மண்டபத்திலிருந்து வெளியேறுமாறு செங்குந்தர் உறவின்முறை சங்கத்தினர் கூறிவிட்டதாக ஆவேசமடைந்த திரிசுதந்திரர்கள் அனைவரும் மண்டபத்தில் இருந்து வெளியேறினர்.
இதையடுத்து கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், கண்காணிப்பாளர் ராமமூர்த்தி, பேஸ்கார் ரமேஷ் ஆகியோர் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் கொடிப்பட்டத்தை உறவின்முறை நிர்வாகிகளிடம் இருந்து பெற்றுக்கொண்டு சிவன் கோவிலுக்கு கொண்டு வந்தனர்.
அங்கு வைத்து கொடிப்பட்டதை திரிசுதந்திர ஸ்தலத்தார்களிடம் கொடுத்தனர். பின்னர் சிவன் கோவிலில் வைத்து கொடிபட்டதிற்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தீபாராதனை முடிந்த பிறகு கொடிப்பட்டத்தை ஐயப்பன் அய்யர் கையில் ஏந்தியவாறு யானை மீது அமர்ந்து 8 வீதிகளிலும் உலா வந்து கோவிலுக்கு கொண்டு சென்றார். 14 ஊர் செங்குந்தர் உறவின்முறை சங்க நிர்வாகிகளுக்கும், திரிசுதந்திரர்களுக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக சுமார் 1 மணி நேரம் காலதாமதமாகி கொடிப்பட்டம் வீதி உலா தொடங்கியது.