6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சம்பந்தப்பட்ட அரசு பள்ளிக்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.;
கோப்புப்படம்
கடலூர் மாவட்டம் வடலூர் ரோட்டு மருவாய் அரசு உயர்நிலைப்பள்ளியில் 6,8,9-ம் வகுப்பு படித்து வந்த 6 மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் உடனடியாக குறிஞ்சிப்பாடியில் உள்ள அரசு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சந்தியா, சம்பந்தப்பட்ட அரசு பள்ளிக்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.
இதுகுறித்து அவர் நெய்வேலி மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி அறிவியல் ஆசிரியர் ஜெயராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்தார்.
அதன்பேரில் ஜெயராஜ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். அதன்படி ஆசிரியர் ஜெயராஜை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தார்.