திருச்செந்தூர் கோவிலில் ஜப்பான் பக்தர்கள் சாமி தரிசனம்
ஜப்பான் நாட்டை சேர்ந்த ஜப்பானிய சிவ ஆதீனம் பாலகும்ப குரு முனி தலைமையிலான சுமார் 80 பக்தர்கள் குழுவினர் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தனர்.;
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். திருவிழா மற்றும் சில முக்கிய தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தமிழகம் மட்டுமல்லாது, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
குறிப்பாக வெளிநாட்டு பக்தர்கள் கோவில் வழிமுறைப்படி சாமிதரிசனம் செய்துவிட்டு அங்குள்ள கட்டிடக்கலையையும் கண்டு ரசிக்கின்றனர். ஜப்பான் நாட்டை சேர்ந்த ஜப்பானிய சிவ ஆதீனம் பாலகும்ப குரு முனி தலைமையிலான சுமார் 80 பக்தர்கள் குழுவினர் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தனர். அவர்கள் பழனி, ராமேசுவரம் உள்ளிட்ட பல்வேறு கோவிலுக்கு சென்று ஆன்மிக பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக ஜப்பானிய பக்தர்கள் நேற்று திருச்செந்தூருக்கு வந்தனர்.
அவர்கள் முதலில் கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடினர். பின்னர் கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், சூரசம்ஹார மூர்த்தி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபாடு செய்தனர். இதில் ஆண்கள் வெள்ளை வேட்டி அணிந்தும், பெண்கள் மார்டன் உடையை தவிர்த்து நேர்த்தியாக உடையணிந்தும் சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் கோவிலுக்கு வெளியே வந்த ஜப்பான் நாட்டு முருக பக்தர்கள் அனைவரும் ஒன்று கூடி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா... ஞானவேல் முருகனுக்கு அரோகரா... கந்தவேல் முருகனுக்கு அரோகரா என தமிழில் பக்தி முழக்கமிட்டனர். இதனை அந்த வழியாக வந்த தமிழக பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பார்த்து சென்றனர்.