உப்பளங்களை கையகப்படுத்தி கப்பல் கட்டும் தளம் அமைக்க எதிர்ப்பு: தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம், கடையடைப்பு
ஒரு தொழிலை அழித்து மற்றொரு தொழிலை கொண்டு வராமல் உப்பள தொழிலை மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு மதசார்பற்ற ஜனதா தள மாநில துணைத்தலைவர் சொக்கலிங்கம் தெரிவித்தார்.;
தூத்துக்குடி கடலோர பகுதிகளில் பாத்திகள் அமைத்து உப்பு உற்பத்தி தொழில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி புதிய துறைமுகத்தை ஒட்டி உள்ள முத்தையாபுரம், முள்ளக்காடு மற்றும் புல்லாவெளி, பழையகாயல் ஆகிய பகுதிகளில் உள்ள உப்பளங்களை கையகப்படுத்தி கப்பல் கட்டும் தளம் விரிவாக்க பணி மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக வியாபாரிகள் கடைகளை அடைத்தனர்.
திருச்செந்தூர் பிரதான சாலையில் உள்ள முத்தையாபுரம் பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு உப்பு உற்பத்தியாளர் சங்க தலைவர் மந்திரமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் சேகர் வரவேற்றார். பொருளாளர் பொன்ராஜ், நிர்வாகிகள் சின்னராஜ், சோட்டை சுப்பையா, முகேஷ் ஷண்முகவேல், சிவாகர், சுயம்பு நாடார், ஸ்ரீராம், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டார் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு மதசார்பற்ற ஜனதா தள மாநில துணைத் தலைவர் வக்கீல் சொக்கலிங்கம் தொடங்கி வைத்து பேசுகையில், "இந்தப் பகுதியில் நாடு சுதந்திரத்திற்கு முன்பு 1937ம் ஆண்டு முதல் உப்பு உற்பத்தி தொழில் நடைபெற்று வருகிறது. கடந்த 1974ம் ஆண்டு முதல் கோவளம் பசுவந்தரை தன்பாடு சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் என்ற பெயரில் சங்கம் அமைத்து, தொழில் செய்து வருகின்றோம். இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒரு லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். எனவே ஒரு தொழிலை அழித்து மற்றொரு தொழிலை கொண்டு வராமல் உப்பள தொழிலை மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.
இந்த போராட்டத்தில் உப்பு உற்பத்தியாளர் சங்கங்கள், உப்பளத் தொழிலாளர் சங்கங்கள், மீன்பீடி தொழிலாளர் சங்கங்கள், வியாபாரிகள் சங்கங்கள், விவசாயிகள் சங்கங்கள், கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்கம் மற்றும் ஏராளமான சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முத்தையாபுரம், முள்ளக்காடு, ஸ்பிக்நகர் சுற்று வட்டாரங்களில் உள்ள வியாபாரிகள் தங்கள் கடைகளை இன்று அடைத்து இருந்தனர். சங்க நிர்வாகிகள் முனியதங்கநாடார், ராஜசேகர், தவசிவேல், சின்னதங்கம், அர்ஜுனன், அன்னசேகர், பொன்தனகரன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.