பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது பரபரப்பு புகார்
நெல்லை ஆணவப்படுகொலை சம்பவத்தில் இரு சமூகத்திற்கு எதிரான கருத்துக்களை யூடியூப் சேனலில் சித்தரித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.;
நெல்லை,
நெல்லை மாவட்டம் கவின் படுகொலை சம்பவத்துக்கு பிறகு, ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை தமிழகம் முழுவதும் வலுத்து வருகிறது. ஆணவ கொலையை தூண்டிவிடும் சக்திகளுக்கு எதிராக நடவடிக்கைகளும் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள்.இந்த நிலையில்தான், கவின் ஆணவப் படுகொலை குறித்து பிரபல யூடியூபர்களான 'பரிதாபங்கள்' கோபி- சுதாகர் தங்கள் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் வெளியிட்டிருக்கும் வீடியோவானது, பெரும்பாலானோரின் வரவேற்பை பெற்றது.
யூடியூப்பில் லட்சக்க்கணக்கான பார்வையாளர்களை இந்த வீடியோ பெற்றுள்ள நிலையில், பரிதாபங்கள் சேனலுக்கு எதிராக கோவை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இரு சமூகத்தினருக்கு இடையே மோதலை உண்டாக்கும்
வகையில் பேசி இருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில், பரிதாபங்கள் யூடியூப் சேனலில் இரு சமூகத்தினர் இடையே பிரச்சினையை உருவாக்கும் வகையில் பல்வேறு கருத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளங்களை குறிப்பிட்டு அந்த சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார்கள். அந்த வீடியோவை யூடியூப் தளத்தில் இருந்து நீக்க வேண்டும். மேற்கொண்டு இதுபோன்ற வீடியோக்கள் வெளியிடாதவறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கோவையை சேர்ந்த வழக்கறிஞர் தனுஷ்கோடி என்பவர் பெயரில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து ஆய்வு செய்த பிறகே இவ்விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையை போலீசார் மேற்கொள்வார்கள் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.