3 கோரிக்கைகள்: பிரதமர் மோடியிடம் மனு அளித்த எடப்பாடி பழனிசாமி

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பிரதமர் மோடியை திருச்சியில் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு சந்தித்து பேசினார்.;

Update:2025-07-27 07:52 IST


தமிழகத்தில் வருகிற 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அ.தி.மு.க. தலைமையில் பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளன. இதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தமிழகம் வந்து கூட்டணியை உறுதி செய்தார்.

அப்போது அவர், 2026-ம் ஆண்டு தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கூறினார். மேலும் பல்வேறு பேட்டிகளிலும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்றே அவர் கூறி வருகிறார். அதே நேரம் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெறுவதுடன் தனிப்பெரும்பான்மை பெற்று அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடியை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து, தமிழக அரசியல் குறித்து பேச இருப்பதாக நேற்று மதியம் தகவல் வெளியானது. இதற்காக சேலத்தில் தங்கி இருந்த எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு திருச்சிக்கு வந்தார்.

அங்கு தனியார் ஓட்டலில் தங்கி இருந்த அவர், இரவு 9.30 மணி அளவில் திருச்சி விமான நிலையத்துக்கு சென்றார். தூத்துக்குடியில் விழா முடிந்த பிறகு, விமானம் மூலம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு நேற்று இரவு 10.15 மணிக்கு பிரதமா் மோடி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் பிரதமருக்கு அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். சில நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது.

அப்போதுபிரதமர் மோடியிடம் 3 கோரிக்கைகள் அடங்கிய மனுவை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அதில், "விவசாயிகளுக்கான சிபில் ஸ்கோர் நடைமுறையிலிருந்து விலக்களிக்க வேண்டும். தமிழகத்தில் ராணுவ தளவாட உற்பத்திக்கு வழிவகுக்கும் ராணுவ வழித்தடத்தை அமைக்க வேண்டும். ராணுவ தளவாடத்தை சென்னை, கோவை, ஓசூர், சேலம், திருச்சியை இணைத்து செயல்படுத்த வேண்டும். கோதாவரி-காவேரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் எடப்பாடி பழனிசாமி மனு அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமருடனான இந்த சந்திப்பின்போது அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி மற்றும் முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக, கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய மந்திரி எல்.முருகன், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மேயர் அன்பழகன், மாவட்ட கலெக்டர் சரவணன், போலீஸ் கமிஷனர் காமினி, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், துரை வைகோ எம்.பி., வீர முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் கே.கே.செல்வகுமார் மற்றும் பா.ஜனதா மண்டல மற்றும் திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் ஆகியோரும் பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி அங்கிருந்து கார் மூலம் திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள பிரபல தனியார் ஓட்டலுக்கு வந்து தங்கினார். அதே நேரத்தில், தமிழகம் வந்துள்ள பிரதமரை சந்திக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்