ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிப்பு- சுப்ரீம் கோர்ட்டு

சாவர்க்கர் மீது அவதூறு கருத்து தெரிவித்ததாக ராகுல் காந்திக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.;

Update:2025-07-25 23:04 IST

புதுடெல்லி,

கடந்த 2022-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் நடத்தப்பட்ட ஒற்றுமை யாத்திரையில் சாவர்க்கருக்கு குறித்து அவதூறாக பேசியதாக நிருபேந்திர பாண்டே என்பவர் லக்னோ போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராக கடந்த ஆண்டு டிசம்பர் 12-ந் தேதி லக்னோ மாஜிஸ்திரேட் கோர்ட்டு சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மனுவை அலகாபாத் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஏப்ரல் 25-ந்தேதி சாவர்க்கர் பற்றிய ராகுல் காந்தியின் பொறுப்பற்ற கருத்துகளுக்காக கடும் கண்டம் தெரிவித்தது. எனினும், உத்தரபிரதேசத்தில் ராகுல் காந்தியின் கருத்துகளுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றவியல் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து அலகாபாத் ஐகோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபங்க்ரா தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்   மீண்டும் விசாரணைக்கு வந்தது. உத்தரபிரதேச அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல், ராகுல் காந்தியின் நடவடிக்கைகள் சமூகத்தில் வெறுப்பு மற்றும் பகைமையை பரப்பும் நோக்கத்துடன் செய்யப்பட்டன. ராகுல் காந்தியின் மனுவை நிராகரித்து அலகாபாத் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு நியாயமானது மற்றும் சட்டப்பூர்வமானது என வாதாடினார்.

இதையடுத்து நிருபேந்திர பாண்டே தனது பதிலை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. மாநில அரசு மற்றும் பிறரால் தாக்கல் செய்யப்பட்ட பதில்களுக்கு ராகுல் காந்தி 2 வாரங்களில் தனது மறுப்பை தாக்கல் செய்யலாம் என உத்தரவிட்டது. ராகுல் காந்தி தாக்கல் செய்த வழக்கில் ஒத்திவைப்பு கடிதம் அனுப்பப்பட்டதை கவனத்தில் கொண்டு, ராகுல் காந்திக்கு எதிரான இந்த வழக்கின் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடையை நீட்டித்து வழக்கை 4 வாரங்களுக்கு பிறகு விசாரிக்க முடிவு செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்