இந்திய மகளிரின் சிந்தூர் அழிக்கப்பட்டதற்கு பதிலடியாகவே ஆபரேசன் சிந்தூர்... மக்களவையில் ராஜ்நாத் சிங் பேச்சு
ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை பற்றி மக்களவையில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து பேசி வருகிறார்.;
புதுடெல்லி,
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு செயல்படும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். இதற்கு பதிலடியாக, இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்திய ராணுவம், பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து தாக்குதலை நடத்தியது. 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இந்திய ஆயுத படைகள் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவானது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது இந்தியாவின் நோக்கமல்ல என மத்திய அரசு கூறியது. பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவித்தது.
ஆனால், அமெரிக்காவின் தலையீட்டாலேயே இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நடைபெறாமல் முடிவுக்கு வந்தது என அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப் கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தையின் முடிவாகவே போர் நிறுத்தம் ஏற்பட்டது என இந்தியா கூறியது.
3-ம் நாட்டின் தலையீடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் மத்திய அரசு கூறியது. இந்நிலையில், டிரம்ப் செய்தியாளர்களிடம் சமீபத்தில் பேசும்போது, உண்மையில் வான்வெளியில் 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்றார்.
நாங்கள் நிறைய போர்களை தடுத்து நிறுத்தியிருக்கிறோம். ஆனால், இரு அணு ஆயுத நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போர் தீவிர கவனத்தில் கொள்ள கூடியது என்றார். அவர் தொடர்ந்து இதுபோன்று கூறி வருவதற்கு பதிலளிக்கும்படி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குரல் உயர்த்தின.
இந்நிலையில், டிரம்ப் கடந்த 22-ந்தேதி கூறும்போது, இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போரானது அணு ஆயுத போரில் சென்று முடிய இருந்தது. அதனை நான் தடுத்து நிறுத்தினேன் என மீண்டும் நேற்று கூறினார். இந்நிலையில், காங்கிரஸ் பொது செயலாளர் (பொறுப்பு) ஜெயராம் ரமேஷ் மறுநாள் கூறும்போது, நாடாளுமன்றத்தில், பஹல்காம்-சிந்தூர் பற்றிய விவாதத்திற்கான உறுதியான தேதிகளை வழங்க பிரதமர் மோடி அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்த சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதில் வெள்ளி விழா கண்டிருக்கிறார். அவர், கடந்த 73 நாட்களில், 25-வது முறையாக இதனை பெரிதுப்படுத்தி கூறி வருகிறார். ஆனால், இந்திய பிரதமரோ முற்றிலும் அமைதி காத்து வருகிறார் என்றார்.
வெளிநாட்டுக்கு செல்வதற்கும், சொந்த நாட்டில் ஜனநாயக அமைப்புகள் நிலைத்தன்மையை இழப்பதற்கும் நேரம் தேடி கொண்டிருக்கிறார் என எக்ஸ் வலைதளத்திலும் அதுபற்றி பதிவிட்டு உள்ளார்.
ஆனால், டிரம்பிடம் கடந்த மாதம் 35 நிமிடங்கள் பேசிய பிரதமர் மோடி அப்போது, இந்தியா மத்தியஸ்தம் செய்யும்படி கோரவில்லை. ஒருபோதும் அதனை ஏற்று கொள்ளாது என்று தெளிவாக கூறிவிட்டார்.
பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு ஏற்பவே, ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான இரு நாடுகளுக்கு இடையேயான விவாதங்கள் நடந்தன என்றும் கூறினார்.
இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆபரேசன் சிந்தூர் பற்றி விரிவாக விவாதம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு, மக்களவையில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசி வருகிறார். அவர் கூறும்போது, விவாதத்திற்கு முழு ஒத்துழைப்பு தர மத்திய அரசு தயாராக உள்ளது என கூறினார். தொடர்ந்து அவர், நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தைரியம் நிறைந்த வீரர்களுக்கு என்னுடைய அஞ்சலியை செலுத்தி கொள்கிறேன்.
பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியான நடவடிக்கையாக ஆபரேசன் சிந்தூர் அமைந்தது. இந்தியாவின் நவீன ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினோம்.
இந்திய மகளிரின் சிந்தூர் அழிக்கப்பட்டதற்கு பதிலடியாகவே தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானில் தீவிரவாத இடங்களை மட்டுமே நாங்கள் இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தினோம். பாகிஸ்தான் தாக்குதலால் இந்தியாவுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை.
இந்திய வீரர்களின் வீரத்திற்குகும், திறமைக்கும் நான் தலைவணங்குகிறேன். அப்போது, இந்திய படைகளுக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டது. பயங்கரவாத செயல்களை இந்தியா பொறுத்து கொள்ளாது என ஆபரேசன் சிந்தூர் வாயிலாக தெளிவுப்படுத்தப்பட்டது. ஆனால், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு மரியாதை செலுத்தியது.
நமது இலக்கு 100 சதவீதம் எட்டப்பட்டு விட்டது. ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின்போது, எந்த அழுத்தத்திற்கும் அடிபணியவில்லை. அது ஒரு தற்காப்பு நடவடிக்கை. முப்படைகளின் அசாத்திய ஒருங்கிணைப்புக்கு இது ஒரு சிறந்த உதாரணம் என அவர் பேசியுள்ளார்.
பயங்கரவாதிகளை வளர்த்தெடுக்கும் இடங்கள் மட்டுமே இலக்காக இருந்தது. போரை நிறுத்த முதலில் பாகிஸ்தான் நாடே கோரிக்கை விடுத்தது. பாகிஸ்தான் விமான தளங்கள் தாக்கப்பட்டதும், தாக்குதலை நிறுத்த அந்நாட்டு அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். நம்முடைய நோக்கங்கள் நிறைவேறின என்று பேசியுள்ளார்.