விளையாடிக் கொண்டிருந்தபோதே இளைஞர் மாரடைப்பால் மரணம்... அதிர்ச்சி சம்பவம்
மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர் கிழே விழும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
ஐதராபாத்,
இன்றைய காலகட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போதும், நடனமாடிக் கொண்டிருக்கும்போதும் திடீரென மாரடைப்பால் ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. அதுவும் இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியடையச் செய்கிறது. அதுபோன்றதொரு சம்பவம் ஐதராபாத்தில் நடந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 25 வயதான ராகேஷ் என்ற இளைஞர் நண்பர்களுடன் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தார். உடலில் எந்த பிரச்சினையும் ஏற்படாத நிலையில், சிறப்பாக விளையாடி வந்த ராகேஷ், திடீரென சரிந்து விழுந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள், உடனடியாக ராகேஷை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ராகேஷ் விளையாடிய போது மாரடைப்பு ஏற்பட்டு கிழே விழும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.