எத்தனை பாகிஸ்தான் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன? என கேட்கவேயில்லை: எதிர்க்கட்சிகளை கிழித்தெடுத்த ராஜ்நாத் சிங்
ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் நம்முடைய வீரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதா? என்றால் அதற்கான பதில், இல்லை என்பதே என ராஜ்நாத் சிங் பதிலளித்து உள்ளார்.;
புதுடெல்லி,
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பலியானதற்கு பதிலடியாக, ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து, இந்திய ராணுவம் தாக்குதலை நடத்தியது. 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இந்திய ஆயுத படைகள் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
எனினும், இதுபற்றி விளக்கம் அளிக்கும்படி காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆபரேசன் சிந்தூர் பற்றி விரிவாக விவாதம் நடத்தப்படும் என எதிர்க்கட்சிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு, மக்களவையில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை பற்றி விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர், விவாதத்திற்கு முழு ஒத்துழைப்பு தர மத்திய அரசு தயாராக உள்ளது என கூறினார். நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தைரியம் நிறைந்த வீரர்களுக்கு என்னுடைய அஞ்சலியை செலுத்தி கொள்கிறேன் என கூறி தொடர்ந்து பேசினார்.
அப்போது அவர், இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் பற்றி கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சியினர், சரியான கேள்விகளை கேட்கவில்லை என குற்றச்சாட்டாக கூறினார்.
பொது விவகாரங்கள் பற்றி அரசிடம் முக்கிய கேள்விகளை கேட்க வேண்டியது எதிர்க்கட்சிகளின் வேலை. நம்முடைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நம்முடைய விமானங்களில் எத்தனை சுட்டு வீழ்த்தப்பட்டன? என கேட்கின்றனர்.
ஆனால், நம்முடைய படையினர் பாகிஸ்தானின் எத்தனை விமானங்களை சுட்டு வீழ்த்தினர் என ஒருபோதும் கேட்கவேயில்லை. நீங்கள் கேள்வி கேட்க விரும்பினால், இந்த ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் நம்முடைய வீரர்கள் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதா? என கேளுங்கள். இதற்கு பதில், இல்லை என்பதே என்று சூடாக பதிலளித்து உள்ளார்.
நீங்கள் கேள்வி கேட்க விரும்பினால், நம்முடைய சகோதரிகள் மற்றும் மகள்களின் சிந்தூரை பயங்கரவாதிகள் அழித்தனர். அந்த பயங்கரவாதிகளின் பின்புலத்தில் இருந்து செயல்பட்டவர்களை ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை வழியாக, நம்முடைய ஆயுத படைகள் அழித்தனவா? என கேளுங்கள். இதற்கு பதில், ஆம் என்பதே. அனைத்து இலக்குகளும் எட்டப்பட்டு விட்டன என கூறியுள்ளார்.