3 நாள் பயணமாக ரஷியா செல்கிறார் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்
அமெரிக்கா அதிக வரி விதித்துள்ள சூழ்நிலையில், ஜெய்சங்கரின் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.;
புதுடெல்லி,
ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. இதனால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், ரஷியா சென்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசினார். தொடர்ந்து, விளாடிமிர் புடின் விரைவில் இந்தியா வர உள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று ரஷிய செல்ல உள்ளார். 3 நாள் பயணமாக ரஷியா செல்லும் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ராவை சந்தித்து பேச உள்ளார். அதைத் தொடர்ந்து, மாஸ்கோவில் நடைபெறும் இந்தியா-ரஷியா வணிக மன்றக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
அமெரிக்கா அதிக வரி விதித்துள்ள சூழ்நிலையில், ஜெய்சங்கரின் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், இந்த சந்திப்பின்போது உக்ரைனில் அமைதியைக் கொண்டுவர டிரம்ப் எடுக்கும் முயற்சிகள் குறித்து ஜெய்சங்கரும், செர்ஜி லாவ்ரோவும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.