துணை ஜனாதிபதி தேர்தல்: இந்தியா கூட்டணி கட்சிகள் முக்கிய முடிவு
துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.;
புதுடெல்லி,
இந்திய துணை ஜனாதிபதியாக இருந்தவர், ஜெகதீப் தன்கர். நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக கடந்த 2022-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், கடந்த மாதம் 21-ந் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். தன்கர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான ஆயத்தப்பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கியது.
அதன்படி, புதிய துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9-ந் தேதி நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. நாடாளுமன்றத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும், அதைத்தொடர்ந்து உடனே வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டு உள்ளார். சி.பி.ராதாகிருஷ்ணன், வருகிற 20-ம் தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என இந்தியா கூட்டணியை சேர்ந்த சில கட்சிகள் கூறியிருந்த நிலையில், துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்? என்பது குறித்து இந்தியா கூட்டணி சார்பில் மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, திமுக எம்.பி. கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சுப்ரியா சுலோ, சமாஜ்வாதி ராம்கோபால் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். துணை ஜனாதிபதி வேட்பாளராக திமுக மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா பெயர் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளரை தேர்வு செய்ய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முழு அதிகாரம் வழங்கி எதிர்க்கட்சிகள் முக்கிய முடிவு எடுத்துள்ளன. மேலும் வேட்புமனு தாக்கல் வரும் 21-ம் தேதியுடன் நிறைவு பெறும் நிலையில், நாளை காலை வேட்பாளரின் பெயரை வெளியிட இந்தியா கூட்டணி திட்டமிட்டுள்ளது. இதற்காக மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நாளை (ஆக.19) மீண்டும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.